பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்து வழித்தடம்: பிரதமர் மோடி நாட்டுக்கு நாளை அர்ப்பணிக்கிறார்

By மு.வேல்சங்கர்

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் தீன்தயாள் உபாத்யாயா - பிஹார் மாநிலம் சோன் நகர் இடையே 137 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள சரக்கு ரயில் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 7) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பொருளாதார மேம்பாட்டுக்காக நாட்டின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி, பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடங்களை அமைத்து, நேரத்தை மீதப்படுத்தவும், செலவைக் குறைக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, 9 மாநிலங்கள் வழியாக 3,381 கி.மீ. தொலைவுக்கு பிரத்யேக வழித்தடம் அமைக்கும் பணிகள் 8 ஆண்டுகளுக்கு முன்தொடங்கின. இதற்காக 11,827 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 125 ரயில் நிலையங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பல்வேறு இடங்களில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் தீனதயாள் உபாத்யாயா- பிஹார் மாநிலம் சோன் நகர் இடையே 137 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக சரக்கு வழித்தடத்தை பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

வந்தே பாரத் ரயில் சேவை: உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெறும் விழாவில், கோரக்பூர்-லக்னோ இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைக்கிறார்.

தற்போது பயன்பாட்டுக்கு வரும் புதிய சரக்கு ரயில் வழித்தடம் மூலம், பிஹார் மாநிலம் சோன்நகர் முதல் குஜராத் மாநிலம் அகமதாபாத் வரை 2,196 கி.மீ. தொலைவுக்கு பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சரக்கு வழித்தடப் பணிகள் முழுவதையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய அர்ப்பணிப்பு சரக்கு ரயில் வழித்தடக் கழக துணைப் பொது மேலாளர் (கார்ப்பரேட் பிரிவு) சித்ரேஷ் ஜோஷி, `இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது: நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியத்தை இணைக்கும் வகையில் 3,381 கி.மீ. தொலைவுக்கு பிரத்யேக வழித்தடம் அமைக்கப்படுகிறது. தற்போது வரை 2,196 கி.மீ. தொலைவுக்கு வழித்தடம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள பணிகளையும் முடித்துவிடுவோம்.

முன்பு சரக்கு ரயில்கள் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டன. பிரத்யேக பாதை அமைக்கப்பட்டுள்ளதால், மணிக்கு 80 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க முடியும். இதனால், குறைந்த நேரத்தில், அதிக சரக்குகளை எடுத்துச் செல்லமுடியும். பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தால், சரக்கு போக்குவரத்து செலவு 15 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறையும். இவ்வாறு சித்ரேஷ் ஜோஷி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE