எத்தனால், மின்சாரத்தில் அதிக வாகனங்கள் ஓடத் துவங்கினால் பெட்ரோல் விலை ரூ.15-ஆகக் குறையும் - நிதின் கட்கரி பேச்சு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ராஜஸ்தானின் பிரதாப்கர் எனும் இடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றினார். இக்கூட்டத்தில் பெரும்பாலும் விவசாயிகள் கூடியிருந்தனர்.

விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: நம் நாட்டில் எத்தனால் மூலம் ஓடும் வாகனங்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன. ஏற்கெனவே மின்சாரம் மூலமாக ஓடும் வாகனங்கள் அறிமுகமாகி சாலைகளில் சென்று வருகின்றன. எத்தனால் மூலம் 60 சதவீதமும், மின்சாரம் மூலம் 40 சதவீதமும் வாகனங்கள் ஓடினால், பெட்ரோலின் சராசரி விலை ரூ.15 ஆக இருக்கும். இது பொது மக்களுக்கு அதிக பலனை அளிக்கும். சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும்.

இதனால், தற்போது உணவு அளிப்பவர்களாக இருக்கும் நம் விவசாயிகள், நம் நாட்டுக்கு ஆற்றல் அளிப்பவர்களாகவும் இருப்பார்கள். இதுதான் நம் அரசின் நோக்கம் ஆகும். இதற்காகவே நான் வரும் ஆகஸ்ட் மாதத்தில் டொயாட்டோ நிறுவனத்தின் புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளேன். இவை அனைத்தும் எத்தனாலில் இயங்க உள்ளன. இதுபோன்றவற்றால் நம் நாட்டில் எரிபொருள் இறக்குமதி குறையும்.

ரூ.16 லட்சம் கோடிக்கு தற்போது எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்டு வந்த தொகை முழுவதும் விவசாயிகளின் வீட்டு வாசல்களுக்கு செல்லும். இது, அவர்களது கிராமம், ஊர் மற்றும் நகரங்களின் வளர்ச்சிக்கு உதவும். விவசாயிகளின் பிள்ளைகள் உள்ளிட்ட இந்நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். சிஎஸ்ஐஆர் எனும் மத்திய அறிவியல் சாலை ஆய்வு நிறுவனம், ஹரியாணாவின் பானிபட்டில் ஒரு ஆய்வை நடத்தி வருகிறது.

இதில், நீரின் மூலம் எத்தனால் தயாரிக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இதுவும் விவசாயிகளின் தயாரிப்பாக இருக்கும். இதன் மூலம், விமானங்களையும் பறக்க விட முயற்சிக்கப்படுகிறது.

எத்தனால், பித்தனால், பயோ டீசல், பயோ எல்என்ஜி, பயோ எலக்ட்ரிக், ஹைட்ரோஜல் என அத்தனையையும் விவசாயிகள் தயாரிக்க உள்ளனர். கரும்புச் சாறு, மொலாசஸ் மற்றும் அரிசி மூலம் பெறப்படும் எத்தனாலில் இருசக்கர வாகனங்களை இயக்க முடியும். எனவே, சாலைகளின் வாகனங்கள் மட்டும் அல்ல, வானத்தில் விமானங்கள் பறக்கவும் விவசாயி காரணமாகி விடுவான். இதுதான் எங்கள் அரசின் விந்தையாகும்.

இதுபோல், நாட்டில் வளர்ச்சிப் பாதையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நம் நாடு இவ்வுலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற உள்ளது. பொருளாதாரத்தில் மிக வேகமாக வளரும் நாடாகவும் நாம் மாற உள்ளோம். பிரதமர் மோடிஜியின் தலைமையிலான ஆட்சியில் தன்னிறைவு கொண்ட நாடாக இந்தியா மாற உள்ளது. இவ்வாறு மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE