வருண் காந்திக்கு மீண்டும் ‘சீட்’ கிடைக்குமா? - உ.பி.யில் மாற்று வேட்பாளரைத் தேடும் பாஜக

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: வருண் காந்தியின் பிலிபித் தொகுதியில் போட்டியிட பொருத்தமான வேட்பாளரை பாஜக தேடி வருகிறது. இதனால், வருணுக்கு அங்கு மீண்டும் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

உத்தரப் பிரதேசம் பிலிபித்தின் மக்களவைத் தொகுதியில் பாஜக எம்.பியாக இருப்பவர் வருண் காந்தி. இவர், அருகிலுள்ள சுல்தான்பூரின் பாஜக எம்.பியான மேனகா காந்தியின் மகன் ஆவார். 2014-இல் எம்.பியான மேனகாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்திருந்தது. 2019 மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு பின் அவருக்கு எந்தப் பதவியும் கிடைக்கவில்லை. அதேபோல், 2019 தேர்தல் பிரச்சாரத்தில் வருண் காந்தியை பாஜக விலக்கி வைத்திருந்தது. அவர் பிலிபித்தின் எம்.பியான பின்பும் வருணுக்கு கட்சியின் எந்த முக்கியத்துவமும் கிடைக்கவில்லை.

இதனால், தாய் மேனகா காந்தி அமைதியாகக் காத்திருக்கிறார். ஆனால், அவரது மகன் வருண் காந்தி, தொடர்ந்து தம் தலைமைக்கு எதிராகப் பேசி வருகிறார். மத்திய அரசின் பல திட்டங்களை கடுமையாக விமர்சித்தும் வந்தார். சமீப நாட்களாக அமைதி காத்தாலும் வருண் காந்தி, தன் கட்சிப் பணிகளிலும் ஆர்வம் காட்டவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் 9 வருட நிறைவுக்காக டெல்லியில் தலைமையகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதற்கும் வருண் செல்லாமல் தவிர்த்து விட்டார்.

எனவே, வருண் காந்திக்கு மீண்டும் பாஜக சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது எனக் கருதப்படுகிறது. இங்கு தம் கட்சிக்காக வேறு பொருத்தமானவரை நிறுத்த பாஜக வேறு வேட்பாளரை தேடி வருவதாகத் தெரிகிறது. பிலிபித்தின் முன்னாள் எம்எல்ஏ அல்லது அருகிலுள்ள மக்களவைத் தொகுதிகளின் முன்னாள் எம்.பிக்களை தேர்வு செய்யும் முயற்சியிலும் பாஜக இறங்கியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலுக்கு பின் வருண் காந்திக்கு எந்தப் பதவியும் அளிக்கப்படவில்லை.

இதையடுத்து, தன் கட்சியை விமர்சிக்கத் துவங்கியவர், காங்கிரஸ் அல்லது சமாஜ்வாதியில் சேர்ந்து விடுவார் என பேசப்பட்டது. இதன் மீதானக் கேள்விக்கு காங்கிரஸின் முக்கியத் தலைவரும், வருணின் ஒன்றுவிட்ட சகோதரருமான ராகுல் காந்தி தம் கொள்கைகள் இரு வேறாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதேசமயம், வருண் தம் கட்சிக்கு வந்தால் வரவேற்பதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் கூறியிருந்தார். இதற்கு வருண் எந்த பதிலும் கூறவில்லை. இதனிடையில், அவருக்கு உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் செல்வாக்கு மிக்க கட்சியான ராஷ்டிரிய லோக் தளத்திலும் அழைப்பு வந்திருந்தது. இதற்கும் அமைதி காத்த வருண் காந்திக்கு, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இறுதி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இவரது தந்தையான சஞ்சய் காந்தி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் ஆவார். காங்கிரஸுக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆதரவு குறைந்தாலும் காந்தி குடும்பத்தினர் மட்டும் தொடர்ந்து இம்மாநிலத்தில் போட்டியிட விரும்புகின்றனர். இதற்கு, காந்தி குடும்பத்திற்கு உத்தரப் பிரதேச மக்களிடம் ஒரு நெகிழ்ச்சியான ஆதரவு தொடர்வது காரணமாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE