பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம் - ‘புல்டோசர்’ நடவடிக்கைக்கு மாயாவதி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

லக்னோ: மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த குற்றவாளியின் உடமைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் அல்லது இடித்துத்தள்ளப்பட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். மேலும், இதுகுறித்த வீடியோ வைரலான பின்னரே மத்தியப் பிரதேச பாஜக அரசு வழக்குப் பதிவு செய்திருப்பது கவலை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மத்தியப் பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் உள்ளூர் தலைவர் ஒருவர் ஆதிவாசி - தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்திருப்பு மிகவும் அவமானகரமான செயலாகும். இந்த மனிதத் தன்மையற்ற செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ வைரலான பின்னரே மாநில அரசு விழித்துக் கொண்டது, அவர்களின் ஈடுபாட்டைக் காட்டுகிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது.

குற்றவாளிக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேச அரசு நடவடிக்கை எடுப்பதோடு மட்டும் நிற்காமல், குற்றவாளியின் உடமைகளை பறிமுதல் செய்யவோ அல்லது இடித்துத் தள்ளவோ வேண்டும். அது குற்றம்சாட்டப்பட்டவர்களை காப்பாற்றக் கூடாது. இதுபோன்ற செயல்கள் அனைவருக்கும் அவமானகரமான ஒன்று" என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பீம் ஆர்மியைச் சேர்ந்த சந்திரசேகர் ஆசாத் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "சர்வாதிகாரத்தின் களியாட்டம் மத்தியப் பிரதேசத்தின் அடையாளமாக மாறி வருகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் நாடு முழுவதும் பட்டியலின, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு எதிராக சர்வாதிகாரம் செலுத்தி வருகின்றனர்.

அந்த மாநிலத்தில் இருந்து இதுபோன்ற காட்டுமிராண்டித்தனத்துக்கான பல சம்பவங்கள் வெளிவருகின்றன. ஆனால், படித்தவர்களும் தங்களின் கண்களை மூடிக் கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். சாமானிய மக்களால் இதை இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. உண்மை என்னவென்றால், எண்ணிக்கையில் சிறிய அளவில் (15 சதவீதம்) உள்ளவர்கள் பெருவாரியான மக்களை (85 சதவீதம்) ஆட்சி செய்து தொடர்ந்து அட்டூழியம் புரிகின்றனர்" என்றார்.

நடந்தது என்ன? - மத்தியப் பிரதேசத்தில் நேற்று முழுவதும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் ஒரு நபர் அமர்ந்திருக்க அவர் மீது இன்னொரு நபர் சிகரெட் புகைத்துக் கொண்டே சிறுநீர் கழிக்கிறார். இந்த வீடியோ வைரலான நிலையில், பாதிக்கப்பட்ட நபர் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது இளைஞர் என்பதும், மனிதாபிமானமற்ற அந்தச் செயலைச் செய்தவர் பிரவேஷ் சுக்லா என்ற நபர் என்பதும் அடையாளம் தெரியவந்தது. சம்பவம் நடந்து 6 நாட்கள் கடந்து நேற்றுதான் அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குற்றவாளி கைது: வீடியோ வைரலாகி பிரச்சினையான நிலையில் சுக்லா தலைமறைவானதாகவும், அவரைப் பல்வேறு இடங்களிலும் தேடி அதிகாலை 2 மணியளவில் கைது செய்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் ஐபிசி சட்டப் பிரிவுகள் 294 (பிறருக்கு தொல்லை தரும் வகையில்: பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல்), 504 (அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு அவமானப்படுத்துதல்) ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுக்லாவின் மனைவி மற்றும் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.

கட்சியும் இல்லை; மதமும் இல்லை: இதற்கிடையில், இவ்விவகாரம் தொடர்பாகப் பேட்டியளித்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான், "கிரிமினல்களுக்கு சாதி, மதம், கட்சி என எதுவும் இல்லை. ஒரு கிரிமினல் எல்லா வகையிலும் கிரிமினல் மட்டுமே. இந்த நபர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE