''உங்களின் வெற்று கோஷங்களுக்கு தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள்'' - மோடி அரசுக்கு  கார்கே எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விலையேற்றம் அதிகரித்து வருவது குறித்து மோடி அரசை விமர்சித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, உங்களின் வெற்று கோஷங்களுக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை, ஏற்றம் அடைந்து வருவது குறித்து மத்திய அரசை, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மோடி அரசின் மோசமான கொள்கைகளால் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் பாஜகவினர் அதிகார ஆசையில் மூழ்கியுள்ளனர். காய்கறிகளின் விலை வான் அளவிற்கு உயர்ந்துள்ளது. நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் 8.45 சதவீதம் அதிகரித்துள்ளது. கிராமங்களில் வேலையில்லா திண்டாட்டம் 8.73 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

கிராமங்களில் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான தேவை உச்சதில் உள்ளது. ஆனால் வேலை இல்லை. ஆம், நரேந்திர மோடி அவர்களே உங்களின் தோல்விகளை விளம்பரங்கள் மூலம் மறைத்து விடலாம் என்பதற்காக தேர்தலுக்கு முன்பு அச்சே தீன், அமிர்த் கல் என்ற முழக்கங்களை உருவாக்கி செயல்படுகிறீர்கள் என்பதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

ஆனால் இந்த முறை அது நடக்காது; மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள். தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களித்து உங்களின் வெற்று கோஷங்களுக்கு பதில் அளிப்பார்கள். மன்னிக்கணும்.. பொதுமக்கள் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவார்கள்". இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

தக்காளி விலை உயர்வு: இதனிடைய நாடுமுழுவதும் முக்கிய நகரங்களில் தக்காளி சில்லறை விற்பனை விலை ரூ.155-ஐக் கடந்துள்ளது. டெல்லியில் கிலோ தக்காளி ரூ.110க்கும் சென்னையில் ரூ.117க்கும் விற்பனையாகிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. பாட்னாவில் காலிஃப்ளவர் விலை கிலோ ரூ.60, முட்டைகோஸ் விலை கிலோ ரூ.60 அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் மிளகாய் மற்றும் தக்காளி விலை கடந்த இரண்டு மாதங்களில் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. மேற்குவங்க வியாபாரிகள் சங்கத்தலைவர் கமல் டே கூறுகையில், "அதிக வெயில் மற்றும் மழையின்மை காரணமாக இந்த விலையுயர்வு ஏற்பட்டுள்ளது. பயிர்கள் கருகி நாசமாகி விட்டதால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE