மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை: ஜி20 உச்சி மாநாட்டுக்கு தீவிரமாக பணியாற்றும்படி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அமைச்சர்களுடன், கொள்கை விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது செப்டம்பரில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டுக்கு தீவிரமாக பணியாற்றும்படி கேட்டுக் கொண்டார்.

பாஜக மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி சமீபத்தில் தொடர் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, செயலாளர் பி.எல்.சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

மாநிலங்களில் உள்ள கட்சியின் மூத்த தலைவர்களை மத்திய அரசிலும், கட்சியிலும் கொண்டு வருவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுத் துறையில் புத்துணர்வை புகுத்த, சில துறைகளில் மாற்றங்களை பிரதமர் மோடி கொண்டு வரலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர்களின் கூட்டத்தை டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட மாநாட்டு மையத்தில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் கூட்டினார். இங்குதான் ஜி20 உச்சி மாநாடு செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அரசின் கொள்கை விஷயங்கள் குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார்.

அமெரிக்க பயணம் குறித்து.. 2047-ம் ஆண்டு தொலைநோக்கு, உள்கட்டமைப்பு துறை, முதலீட்டு செலவினங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விளக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தாங்கள் செய்த பணிகள் குறித்து மத்திய அமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் பகிர்ந்து கொண்டனர். செப்டம்பரில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாடு குறித்து விரிவாக பேசிய பிரதமர் மோடி, இந்த மாநாட்டுக்கு ஒவ்வாரு அமைச்சரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மேற்கொண்ட அமெரிக்கா மற்றும் எகிப்து பயணத்தில் நடந்த விஷயங்கள் குறித்தும் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி விரிவாக விளக்கினார். இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடந்தது. ‘‘மத்திய அமைச்சர்களுடனான இந்த கூட்டம் பயனுள்ளதாக இருந்தது’’ என பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE