பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு விலக்கு அளிக்கலாம்: நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பாஜக பரிந்துரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு விலக்கு அளிக்கலாம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் பாஜக தரப்பில் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, தத்தெடுப்பு உள்ளிட்டவை தொடர்பாக நாட்டின் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரேவிதமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.

இந்த சூழலில் சட்டத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு நேற்று முன்தினம் கூடி பொது சிவில் சட்டம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தியது. குழுவின் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில் மோடி கூட்டத்துக்கு தலைமை வகித்தார். குழுவில் மொத்தம் 31 எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். எனினும் கூட்டத்தில் 17 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

சட்ட ஆணையம் தரப்பில் அதன் செயலாளர் பிஸ்வால் ஆஜராகி நாடாளுமன்ற நிலைக்குழுவில் விளக்கம் அளித்தார். கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொது சிவில் சட்டத்தை பழங்குடியினர் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதுதொடர்பாகவும் நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டது. இதற்கு நிலைக் குழுத் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி ஒரு யோசனையை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. அதாவது பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு விலக்கு அளிக்கலாம் என்று அவர் பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பழங்குடியினர் எதிர்ப்பது ஏன்? நாடு முழுவதும் 705-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். அவர்களது சமூகத்தில் ஒரு ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது. இதேபோல சில பழங்குடியின குழுக்களில் ஒரு பெண், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் வழக்கமும் இருக்கிறது.

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் தங்களது திருமண நடைமுறை பாதிக்கப்படும் என்று பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டிலேயே பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பழங்குடி அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 12% பேர் பழங்குடியினர் ஆவர். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE