டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் பதவி ஏற்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியின் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி உமேஷ் குமாரின் பதவி ஏற்பை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உமேஷ் குமாரின் நியமனத்தை எதிர்த்து டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 11-ம் தேதி நடைபெறும். அது வரை உமேஷ் குமாருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி டெல்லி அரசை துணைநிலை ஆளுநர் கேட்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தலைநகரின் நிர்வாகத்தை யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக டெல்லி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடந்து வரும் போரின் சமீபத்திய விஷயமாக டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் நியமனம் சேர்ந்துள்ளது.

டெல்லியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ராஜஸ்தான் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சங்கீத் ராஜ் லோதாவை ஆம் ஆத்மி அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அலகாபாகத் உயர் நீதிமன்ற நீதிபதி உமேஷ் குமாரை டிஇஆர்சி-யின் தலைவராக மத்திய அரசு நியமித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை சமீபத்தில் டெல்லி அரசு நிர்வாகிகளைக் கட்டுப்படுத்தும் அதன் சமீபத்திய அவசரச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், உமேஷ் குமார் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு கேட்டிருந்தார். இந்த நிலையில், டெல்லி மின்துறை அமைச்சர் அதிஷிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரால் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புபிரமாணமும் செய்துவைக்க முடியவில்லை. இதனிடையே, உமேஷ் குமாரின் நியமனத்தை எதிர்த்து டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியின் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி உமேஷ் குமாரின் பதவி ஏற்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது. அத்துடன், இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 11-ம் தேதி நடைபெறும். அது வரை உமேஷ் குமாருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி டெல்லி அரசை துணைநிலை ஆளுநர் கேட்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

அதிகார போட்டி: தலைநகரின் நிர்வாகத்தை யார் கட்டுப்படுத்துவது என்பது குறித்து டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே நீண்ட போராட்டம் நிலவிவருகிறது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசசன அமர்வு, பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே உள்ளது என்று தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் வகையில் தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை உருவாக்கும் அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு பிறப்பித்தது குறிப்படத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE