தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மும்பையில் புதிய அலுவலகம் தொடங்குகிறார் அஜித் பவார்

By செய்திப்பிரிவு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், மும்பையில் மந்த்ராலயா-வுக்கு எதிரே கட்சிக்கு புதிய அலுவலகத்தை அஜித் பவார் இன்று தொடங்குகிறார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சித் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், நேற்று முன்தினம் பாஜக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து, அன்றைய தினமே அவர் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்றார். அவரோடு, தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார், தாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்றும், கட்சியின் 40 எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், கட்சியின் கொடி, சின்னம் அனைத்தும் தங்களுக்கு உரியதே என்றும் தெரிவித்தார். அதேநேரத்தில், கட்சியின் தேசிய தலைவர் யார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, சரத்பவார்தான் கட்சியின் தேசிய தலைவர் என்று பதில் அளித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் பிளவை ஏற்படுத்தி இருப்பதாகக் குற்றம் சாட்டிய சரத் பவார், கட்சியை மீண்டும் கட்டமைக்கப்போவதாக அறிவித்தார். பாஜக கூட்டணியில் சேர்ந்து அமைச்சர்களாக பதவியேற்ற அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சி, அமைச்சர்களாக பதவி ஏற்ற அனைவரையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரி மகாராஷ்டிர சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது.

பதிலுக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநில தலைவரான ஜெயந்த் பாட்டீலை நீக்குவதாக அஜித் பவார் தரப்பு அறிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் 24 பேர் அஜித் பவாருக்கு ஆதரவாக இருப்பதாகவும், 14 பேர் சரத் பவாருக்கு ஆதரவாக இருப்பதாகவும், 15 பேர் இன்னும் முடிவெடுக்காமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முக்கிய நிர்வாகிகளின் கூட்டத்தை வரும் 5ம் தேதி கூட்டி இருக்கிறார் அஜித் பவார்.

அதற்கு முன்பாக, கட்சியின் தலைமையகம் இன்று திறக்கப்பட உள்ளது. மும்பையில் மந்த்ராலயாவுக்கு எதிரே உள்ள ஒரு கட்டிடம் கட்சித் தலைமையகமாக மாற்றப்பட உள்ளது. அஜித்பவார் கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE