மகாராஷ்டிராவில் இரண்டாக உடைந்த தேசியவாத காங்கிரஸ் - தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும் முயற்சியில் சிக்கல்

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்துள்ளதால் பாஜகவுக்கு எதிராக தேசியஅளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவது பாதிக்கப்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

2024-ம் ஆண்டு ஏப்ரலில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை அகற்ற காங்கிரஸ் தலைமையில் சுமார் 19 கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட முயற்சிகள் நடக்கின்றன.இதற்காக அண்மையில் பிஹாரில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் பலம் வாய்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்துள்ளது.

அக்கட்சியின் நிறுவனரான சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவிடம் தஞ்சம் புகுந்துள்ளார். 40 எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணி அரசில் இணைந்த அவருக்கு துணை முதல்வர் பதவியை பாஜக வழங்கியுள்ளது.

இது மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு)தலைமையிலான மகா விகாஸ் கூட்டணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த பிளவு மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைப்பதையும் பாதிக்கும் என்று தெரிகிறது.

தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இருந்தபோதும் 2024-ல் மக்களவை, மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு பாஜக-சிவசேனா (ஷிண்டே பிரிவு) கூட்டணி ஸ்திரமாக இல்லை என்றே தெரிகிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணி, பிஹாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதா தளத்துடன் நீண்ட ஆண்டுகளாக கூட்டணி என்ற ரீதியில் கடந்த மக்களவைத் தேர்தலில் பெருவாரியான வெற்றியை 2 மாநிலங்களிலும் பாஜக பெற்றது.

இதனால் இரு மாநிலங்களிலும் கடந்த தேர்தலின்போது அதிக எம்.பி.க்களை பாஜகவால் பெற முடிந்தது.

ஆனால் தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி, உத்தவ் பிரிவு, ஏக்நாத் ஷிண்டே பிரிவு என 2-ஆக உடைந்துள்ளது. பிஹாரில் நிதிஷ் குமாருடன் கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே, மகாராஷ்டிராவில் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால், மக்களவைத் தேர்தலுடன் இணைத்து பேரவைத் தேர்தலையும் நடத்தவேண்டும் என்று மாநில பாஜக கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில்தான், மாநில பாஜகவை பலப்படுத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை, பாஜக தன் வசம் இழுத்துள்ளது. 40 எம்எல்ஏக்களுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பாஜக பக்கம் வந்துள்ளதால், அங்கு பாஜகவின் பலம் கூடியுள்ளது.

தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர்களான பிரபுல் படேல், சாஹன் புஜ்பால், சுனில் தட்கரே ஆகியோர் அஜித் பவாருடன் இணைந்து பாஜகவில் அடைக்கலமாகியுள்ளனர். இதனால் பாஜகவின் வாக்கு வங்கி கூடும் என்று பாஜக மேலிடம் கணக்குப் போடுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக தனது மகள் சுப்ரியா சுலேவை, சரத் பவார் முன்னுறுத்தியதால் அஜித் பவார் கடும் அதிருப்தி அடைந்தார். கட்சியில் சரத் பவாருக்கு அடுத்தபடியாக இருக்கும் அஜித் பவார், தனக்குத் தலைவர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். இந்நிலையில் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த அஜித் பவாரை, பாஜக மேலிடம் தன்வசம் இழுத்துள்ளது.

இது மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு பெருத்த அடியாக மாறியுள்ளது. மேலும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் பெரும்பாலான எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முடிவுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

கூட்டணியை உருவாக்க முயன்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார் ஆகியோருக்கு இது சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

சரத் பவாருக்கு நெருங்கிய தலைவர்களாக இருந்த பிரபுல் படேல், சாஹன்புஜ்பால், தட்கரே, திலீப் வால்சே பாட்டீல் ஆகியோர் தற்போது அஜித் பவாருக்கு பக்கபலமாக நிற்கின்றனர்.

தற்போது மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால், தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலில் நிற்பது பெருமளவில் பாதிக்கும் என பாஜக கருதுகிறது.

நாட்டின் வர்த்தகத் தலைநகராக விளங்கும் மும்பையிலிருந்துதான், பெரும்பாலான அரசியல் கட்சி களுக்கு தேர்தல் நிதி வழங்கப்படும் நிலை இருக்கிறது. எனவே, மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது எழுந்துள்ள அரசியல் மாற்றம் எதிர்க்கட்சிகளின் தேசிய ஒருங்கிணைப்புக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE