நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய அரசியல் கட்சிகளுக்கு ஆன்லைன் போர்ட்டல் - தலைமை தேர்தல் ஆணையம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையின் கீழ் கடந்த ஓராண்டாக அரசியல் கட்சிகளின் நிதி மற்றும் செலவினங்களில் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்வையும் ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களின் நிதிநிலை அறிக்கைகள், பங்களிப்பு அறிக்கைகள் மற்றும் தேர்தல் செலவுகணக்குகள் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்காக புதிய போர்ட்டலை தேர்தல் ஆணையம் நேற்று தொடங்கியுள்ளது.

ஆன்லைன் முறையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய விரும்பாத அரசியல் கட்சிகள் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பதற்கான காரணங்களை தேர்தல்ஆணையத்துக்கு எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், பரிந்துரைக்கப்பட்ட வடிவங்களில் குறுந்தகடுகள் (சிடி) அல்லது பென்டிரைவ்களுடன் ஹார்ட் காப்பி வடிவில் நிதி நிலை அறிக்கைகளை அரசியல் கட்சிகள் தொடர்ந்து தாக்கல் செய்யலாம்.

ஜனநாயக செயல்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையின் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டியது ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் கடமை. தேர்தல் செயல்முறைகளில், குறிப்பாக நிதி வெளிப்பாடுகளில் அவை பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

அரசியல் கட்சிகள் சார்பில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து அறிக்கைகளும் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நிதி நிலை அறிக்கையை நேரில் தாக்கல் செய்வதற்கான சிரமங்களை குறைக்கவும், தரப்படுத்தப்பட்ட வடிவில் சரியான நேரத்தில் நிதி நிலை அறிக்கைகளை தாக்கல் செய்வதை உறுதி செய்யும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE