“வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான எனது போர் ஆரம்பம்... கட்சியைக் கட்டியெழுப்புவேன்” - சரத் பவார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான எனது போராட்டம் இன்று தொடங்குகிறது. இதுபோன்ற கிளர்ச்சிகள் நடக்கும். நான் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவேன்" என்று தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், குரு பூர்ணிமாவை முன்னிட்டு மகாராஷ்டிராவின் சாதரா மாவட்டத்தின் காரத் பகுதியில் உள்ள மாநிலத்தின் முதல் முதல்வரும், தனது வழிகாட்டியுமான யஷ்வந்த் ராவ் சாவனின் நினைவிடத்துக்குச் சென்று அவருக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த தனது ஆதராவாளர்களிடம் சரத் பவார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "இன்று மகராஷ்டிராவில், நாட்டில் சில குழுக்களால் சாதி மற்றும் மதத்தின் பெயரால் சமூகத்தில் கலகங்கள் உருவாக்கப்படுகின்றன. கிளர்ச்சியாளர்கள் நிச்சயம் திரும்பி வருவார்கள், அதற்கு காலக்கெடு உள்ளது.

நாங்கள் உத்தவ் தாக்கரே தலைமையின் கீழ் மகாராஷ்டிர மக்களுக்கு சேவை செய்தோம். ஆனால், சிலரால் எங்களின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளிலும் இதுவே நடந்துள்ளது. எதிர்க்கட்சிகளை பாஜக அழிக்க நினைக்கிறது. சமூகத்தில் அச்சத்தினை ஏற்படுத்துகிறது.

தேசியவாத காங்கிரஸை உடைக்க நினைத்தவர்களுக்கு அவர்களின் உண்மையான இடம் எது என்பதை நாங்கள் காண்பிப்போம். வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான எனது போர் இன்று தொடங்குகிறது. இதுபோன்ற கிளர்ச்சிகள் நடக்கதான் செய்யும். என்சிபியை மீண்டும் கட்டி எழுப்புவேன்"என்று அவர் தெரிவித்தார்.

பலத்தை நிரூப்பித்த பவார்: புனேவில் இருந்து காரத்துக்கு திங்கள்கிழமை காலையில் சரத் பவார் கிளம்பினார். வழியெங்கும் அவர் தனது ஆதரவாளர்களைச் சந்தித்தார். காரத்தில் சரத் பவாரை உள்ளூர் எம்எல்ஏ பாலாசாகேப் பாடீலும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் வரவேற்றனர். பதவி ஏற்பதற்கு முன்பாக அஜித் பவாருடன் அவரின் வீட்டில் இருந்த எம்எல்ஏ மகராந்த் பாடீல் ஆகியோரும் சரத் பவாரை வரேவேற்றனர். கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் நெருக்கடியான நேரத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சியின் பிரித்வி சவானும் சரத் பவாருடன் இருந்தார்.

அஜித் பவார் கிளர்ச்சி: முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி அவரது தலைமையில் என்சிபி எம்எல்ஏக்கள் 40 பேருடன் ஆளும் பாஜக கூட்டணி அரசில் இணைந்தார். உடனடியாக, அவர் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். மும்பையில் ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய விழாவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் பட்னாவிஸ் முன்னிலையில், அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். அவரது ஆதரவாளர்களான 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். வாசிக்க > மகாராஷ்டிராவில் 40 எம்எல்ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு: தேசியவாத காங்கிரஸ் உடைந்தது

குடும்பத்தில் அதிகார மோதல்: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார். காங்கிரஸில் இணைந்து மூத்த தலைவராக உருவெடுத்தார் சரத் பவார். அவரது ஆதரவுடன் காங்கிரஸில் கால் பதித்த அஜித் பவாரும் கட்சியின் மூத்த தலைவராக வளர்ந்தார். 1999-ல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.

கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் சரத் பவாரின் ஒரே மகள் சுப்ரியா சுலேவுக்கும், அஜித் பவாருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வந்தது. நீறுபூத்த நெருப்பாக இருந்த இந்த மோதல் தற்போது வெடித்துள்ளது. தேசியவாத காங்கிரஸின் 53 எம்எல்ஏக்களில் 40 பேருடன் பாஜக கூட்டணி அரசில் அஜித் பவார் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE