இந்தியா-மியான்மர்-தாய்லாந்து: முத்தரப்பு நெடுஞ்சாலை பணிகள் 70 சதவீதம் நிறைவு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கூறியதாவது:

இந்தியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் இடையே 1,400 கி.மீ. நீள நெடுஞ்சாலைப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதில், 70 சதவீத பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது. இந்த முத்தரப்பு சாலையின் மூலம் தென்கிழக்கு ஆசியாவுடன் தரைவழிப் போக்குவரத்துக்கான தொடர்புகளை கணிசமாக அதிகரிக்க முடியும். குறிப்பாக, வர்த்தகம், கல்வி, சுகாதாரம், சுற்றுலா உறவுகளுக்கு இந்த முத்தரப்பு சாலை உத்வேகமளிக்கும். இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

இந்த முத்தரப்பு நெடுஞ்சாலை மியான்மர் வழியாக தாய்லாந்தில் உள்ள மே சோட்டுடன் இந்திய மாநிலம் மணிப்பூரில் உள்ள மோராவை இணைக்கும்.

மூன்று நாடுகளை இணைக்கும் சாலை பணிகள் எப்போது முடியும் என்று நிதின் கட்கரி தெரிவிக்கவில்லை. முன்னதாக, இந்த முத்தரப்பு நெடுஞ்சாலை பணிகளை 2019 டிசம்பரில் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், பல்வேறு இடர்பாடுகள் காரணமாக இந்த பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE