மகாராஷ்டிராவில் 40 எம்எல்ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு: தேசியவாத காங்கிரஸ் உடைந்தது

By செய்திப்பிரிவு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 40 எம்எல்ஏக்கள் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசில் இணைந்தனர். இதனால், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்துள்ளது. மாநிலத்தின் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார்.

கடந்த 2019 அக்டோபரில் மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. பாஜக 105, அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளில் வென்றன. முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் எழுந்த போட்டியால் கூட்டணி உடைந்தது.

பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். எதிர் அணியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸின் (என்சிபி) மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார். அப்போது என்சிபி எம்எல்ஏக்கள் ஆதரவு தராததால் ஆட்சி கவிழ்ந்தது.

பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கைகோத்து 2019 நவம்பரில் புதிய கூட்டணி அரசை அமைத்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர்.

சுமார் இரண்டரை ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு சிவசேனா மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். பெரும்பான்மை சிவசேனா எம்எல்ஏக்கள் ஷிண்டே அணியில் இணைந்தனர்.

பாஜகவும், சிவசேனாவின் ஷிண்டே அணியும் இணைந்து 2022 ஜூன் 30-ல் புதிய கூட்டணி அரசை அமைத்தன. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

ஓரம்கட்டப்பட்ட அஜித் பவார்

சில மாதங்களுக்கு முன்பு அஜித் பவார் தலைமையில் என்சிபி கட்சியின் 40 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின. கட்சி உடைவதை தடுக்க தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்தார். தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று 4 நாட்களுக்குப் பிறகு கட்சித் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொண்டார். அப்போது முதல் அஜித் பவார் ஓரம்கட்டப்பட்டு வந்தார். கடந்த ஜூனில் என்சிபி செயல் தலைவர்களாக சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, பிரபுல் படேல் அறிவிக்கப்பட்டனர்.

இதனால் அதிருப்தியில் இருந்த என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் தற்போது தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அவரது தலைமையில் என்சிபி எம்எல்ஏக்கள் 40 பேர் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் இணைந்துள்ளனர். உடனடியாக அவர் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

மும்பையில் ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய விழாவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் பட்னாவிஸ் முன்னிலையில், துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். அவரது ஆதரவாளர்களான 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

சரத் பவாரின் வலது கரமாக இருந்த என்சிபி செயல் தலைவர் பிரபுல் படேலும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார், ‘‘தேசியவாத காங்கிரஸில் தொடர்ந்து நீடிக்கிறோம். பாஜக கூட்டணி அரசில் புதிய கட்சியாக இணைந்துள்ளோம். கட்சியின் பெயர், சின்னம் எங்களுக்கே சொந்தம். அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தல் மற்றும் மகாராஷ்டிர பேரவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து எதிர்கொள்வோம்’’ என்றார்.

பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க தீவிர முயற்சி நடந்து வரும் நிலையில் அஜித் பவார் பாஜக கூட்டணிக்கு மாறியிருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்சி தாவல் சட்டம் பாயுமா?: ஓரிரு எம்.பி. அல்லது எம்எல்ஏ தானாக முன்வந்து கட்சியில் இருந்து விலகினால், கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் அவர்கள் பதவியை இழப்பார்கள். எனினும், கட்சியின் மொத்த எம்.பி.க்கள் அல்லது எம்எல்ஏக்களில் மூன்றில் 2 பங்கினர் பிரிந்தால், அது பிளவு என்று கருதப்படும். அவர்கள் பதவியில் தொடர்ந்து நீடிக்கலாம். தேசியவாத காங்கிரஸில் உள்ள 53 எம்எல்ஏக்களில் தற்போது 40 பேர் அஜித் பவாருக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள், சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தில் அதிகார மோதல்: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார். காங்கிரஸில் இணைந்து மூத்த தலைவராக உருவெடுத்தார் சரத் பவார். அவரது ஆதரவுடன் காங்கிரஸில் கால் பதித்த அஜித் பவாரும் கட்சியின் மூத்த தலைவராக வளர்ந்தார். 1999-ல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.

கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் சரத் பவாரின் ஒரே மகள் சுப்ரியா சுலேவுக்கும், அஜித் பவாருக்கும் இடையேநீண்ட காலமாக மோதல் நீடித்து வந்தது. நீறுபூத்த நெருப்பாக இருந்த இந்த மோதல் தற்போது வெடித்துள்ளது. தேசியவாத காங்கிரஸின் 53 எம்எல்ஏக்களில் 40 பேருடன் பாஜக கூட்டணி அரசில் அஜித் பவார் இணைந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE