பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கருத்து

By செய்திப்பிரிவு

லக்னோ; ‘‘பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை, அதை மத்தியில் உள்ள பாஜக அரசு அமல்படுத்த நினைக்கும் விதம்தான் தவறு’’ என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியதாவது:

நாடு முழுவதும் ஒரே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதை வலுக்கட்டாயமாகத் திணிக்க கூடாது. மத்தியில் உள்ள பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கும் விதம்தான் சரியில்லை. இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்க வேண்டும். இந்த சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. குறுகிய அரசியல் மனப்பான்மையுடன் இந்த சட்டத்தை அமல்படுத்த நினைப்பது நாட்டின் நலனுக்காக தெரியவில்லை.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய சட்ட ஆணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. மேலும்,பொது மக்கள் கருத்து தெரிவிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உட்பட பல்வேறு பாஜக தலைவர்களும் பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களிடம் பேச தொடங்கி உள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களில் முதல் கட்டமாக இந்தச் சட்டத்தை அமல்படுத்த சட்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தச் சட்டத்துக்கு கொள்கை ரீதியாக ஆதரவு அளிப்பதாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசும் தெரிவித்துள்ளது. வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE