மகாராஷ்டிரா துணை முதல்வரானார் அஜித் பவார்: என்சிபி எம்எல்ஏ.,க்கள் பலரும் கட்சித் தாவல்

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் பலரும் ஆளும் சிவசேனா (ஷிண்டே பிரிவு) - பாஜக கூட்டணியில் இணைந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 53 எம்எல்ஏக்களில் 40-க்கும் மேற்பட்டோர் அஜித் பவார் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அஜித் பவார் மற்றும் 8 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் அமைச்சரகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அஜித் பவார் வெளிப்படையாகவே மகாராஷ்டிரா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாகக் கூறினார்.

இதுதொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில், "மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். மாறாக, கட்சியில் எதாவது பொறுப்பில் என்னை நியமிக்க வேண்டுகிறேன். எதிர்க்கட்சித் தலைவராக நான் சரியாக செயல்படவில்லை என்று சொல்லப்படுகிறது. சொல்லப்போனால் இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வம் இல்லை.

எனினும் கட்சி எம்எல்ஏக்களின் வற்புறுத்தலால் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டேன். எனவே, அதில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். மாறாக, கட்சியில் எனக்கு பொறுப்பு வேண்டும். கட்சி அமைப்பில் எனக்கு எந்தப் பதவி ஒதுக்கப்பட்டாலும் சரி, அதற்கு நியாயம் சேர்ப்பேன். இந்த கோரிக்கை குறித்து என்சிபி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா அரசியலில் இந்தப் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இனி அஜித் பவார், தேவேந்திர பட்நவிஸ் என மகாராஷ்டிராவுக்கு இரண்டு துணை முதல்வர்கள் இருப்பார்கள். அஜித் பவார் மகாராஷ்டிராவின் 8-வது துணை முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE