பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்திய எல்லை பாதுகாப்புப் படையும், பாகிஸ்தான் ராணுவமும் அட்டாரி-வாகா எல்லையில் இன்று இனிப்புகளை பரிமாறிக் கொண்டன. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் இதுபோன்று இனிப்புகளை பரிமாறிக்கொள்ளும் செய்தி ஆண்டுக்கு சில முறை நம்மை கடந்து செல்வது வழக்கம்தான்.
ஆனால், இவ்வாறு இனிப்புகளை பரிமாறிக்கொள்வது என்பது சாதாரணமான நிகழ்வா? இதில் முக்கியத்துவம் ஏதும் இருக்கிறதா? இந்தியாவும், பாகிஸ்தானும் எப்போதெல்லாம் இனிப்புகளை பரிமாறிக்கொள்கின்றன? எம்மாதிரியான இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்படும்? இனிப்புகள் மட்டும்தான் பரிமாறிக்கொள்ளப்படுமா? பாகிஸ்தான் உடன் மட்டும்தான் இந்தியா இனிப்புகளை பரமாறிக்கொள்கிறதா? இனிப்புகளை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமா? - இதுபோன்ற பல கேள்விகள் இருக்கின்றன. இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்திருக்கிறார் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேஜர் மதன்.
"தீபாவளி, பக்ரீத், ரம்ஜான் ஆகிய பண்டிகை நாட்களில் இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகளும், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் அதிகாரிகளும் எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொள்வது வழக்கம். ஆங்கில புத்தாண்டின்போதும் இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்படும். இது ஒரு மரபு; கட்டாயம் கிடையாது. பொதுவாக, பஞ்சாப்பில் உள்ள அட்டாரி-வாகா எல்லை, ஜம்மு, பூஞ்ச், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான சாலையில் உள்ள எல்லை ஆகிய இடங்களில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இனிப்புகளை பரிமாறிக்கொள்வார்கள். இனிப்புகளை பரிமாறிக்கொள்ளும் இடம் இருவருக்கும் பொதுவான இடமாகவும், தெளிவாக எல்லை வரையறுக்கப்பட்ட இடமாகவும், சாலை வசதி உள்ள இடமாகவும் இருக்க வேண்டும். அத்தகைய இடங்களில்தான் இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்படும்.
பூங்கொத்து கொடுத்து, இனிப்புகளை கொடுப்பது வழக்கம். நாம் கொடுக்கும் இனிப்புகளில் நம் நாட்டின் சிறப்பான இனிப்புகள் இடம்பெற்றிருக்கும். பாகிஸ்தான் கொடுக்கும் இனிப்புகளில் அவர்கள் நாட்டின் சிறப்பான இனிப்புகள் இருக்கும். குறிப்பாக, கராச்சி இனிப்புகளை அவர்கள் தவறாமல் கொடுப்பார்கள். காரணம் அவை மிகவும் சுவையாக இருக்கும். குறிப்பாக, நாம் வேர்க்கடலைகளைக் கொண்டு செய்யும் இனிப்புகளைப் போன்று அவர்கள் உலர் பழங்களைக் கொண்டு அந்த இனிப்புகளை செய்வார்கள்.
இந்த இடங்களில் மட்டும்தான், இந்த சமயங்களில் மட்டும்தான் என்றில்லை. இரு நாட்டு ராணுவ அதிகாரிகளின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டங்களின்போதும் இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்படும். தேவையில்லாமல் நாம் சண்டையிட்டுக்கொள்ளக்கூடாது; அமைதியாக இருக்க வேண்டும் எனும் செய்தியை பகிரும் நோக்கில் இவ்வாறு இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. இரு நாட்டு ராணுவமும் சண்டையிட்டுக்கொள்ளும் சமயங்களிலும், எல்லையில் அமைதி இல்லாத காலங்களிலும் இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்பட மாட்டாது.
பாகிஸ்தான் உடன் மட்டுமல்லாது வங்கதேசம், சீனா ஆகிய நாடுகளுடனும் நாம் இனிப்புகளை பரிமாறிக்கொள்கிறோம். வங்கதேசம் நாட்டைப் பொறுத்தவரை, பண்டிகை காலங்களில் மட்டுமல்லாது, பிற காலங்களிலும் இனிப்புகள், பழங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். இந்தியாதான் அவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தது என்பதால், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து பங்களாதேஷ் பிரதமர் சார்பில், இந்திய பிரதமருக்கும் பங்களாதேஷ் நாட்டை ஒட்டிய இந்திய மாநிலங்களின் முதல்வர்களுக்கும் மாம்பழங்கள் பரிசளிக்கப்படுகின்றன.
கோடைக்காலத்தில் முதல் அறுவடை மூலம் கிடைக்கும் மாம்பழங்களை அவர்கள் நமக்கு பரிசளிப்பார்கள். இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம், பங்களாதேஷ் ரேஞ்சர்ஸ் அதிகாரிகள் மாம்பழங்களை வழங்குவார்கள். நாமும் பதிலுக்கு நமது நாட்டின் பழங்கள், இனிப்புகள் ஆகியவற்றை பரிசளிப்போம்.
சீனாவைப் பொறுத்தவரை, பண்டிகைக் காலங்களில் இனிப்புகளை பரிமாறிக்கொள்வது எனும் பழக்கம் இல்லை. ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கூட்டங்களின்போது சூழலைப் பொறுத்து இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்படும். இனிப்பு, பழங்கள் ஆகியவற்றைத் தாண்டி, எலக்ட்ரானிக் பொருட்களையும் சீன ராணுவம் நமக்கு பரிசாக அளிக்கும். அவர்கள் நாட்டின் சிறந்த கண்டுபிடிப்புகளை நமக்கு தெரிவிக்கும் நோக்கில் அவர்கள் இவ்வாறு பரிசுகளை வழங்குவார்கள்.
நாம் இந்திய இனிப்புகள், காரங்கள் போன்றவற்றை பரிசளிப்போம். இலங்கையை பொறுத்தவரை, இரு நாடுகளுக்கும் இடையே கடல் இருப்பதால் இதுபோன்று எல்லையில் இனிப்புகள் பரிமாறிக்கொள்வது கிடையாது" என்று மேஜர் மதன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago