“9 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஏன்?” - பொது சிவில் சட்டம் குறித்து பிரதமருக்கு கபில் சிபல் கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் வலியுறுத்தும் பொது சிவில் சட்டம் எப்படியானது என்றும், அது இந்துக்கள், பழங்குடியினர் மற்றும் வடகிழக்கு பகுதிகளை உள்ளடக்கி இருக்கிறதா என்றும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினரான கபில் சிபல் புதன்கிழமை வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், "பிரதமர் பொது சிவில் சட்டத்தை வலியுறுத்துகிறார். எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களை தூண்டுவதாகக் குற்றம் சாட்டுகிறார். 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஏன்? 2024? அவரது முன்மொழிவு எவ்வாறு பொதுவானது. அது இந்துகள், பழங்குடியினர், வடகிழக்கில் உள்ளவர்கள் அனைவரையும் உள்ளடக்கி உள்ளதா? ஒவ்வொரு நாளும் உங்கள் கட்சிக்காரர்களால் முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகிறார்கள். இப்போது ஏன் இந்த கவலை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் பேச்சு: முன்னதாக, போபாலில் செவ்வாய்க்கிழமை பேசிய பிரதமர் மோடி, "பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தில் தாத்தா, பாட்டி, கணவன், மனைவி, மகன், மகள் என பல உறுப்பினர்கள் உள்ளனர். அந்தக் குடும்பத்தை சேர்ந்த ஓர் உறுப்பினருக்கு ஒரு சட்டமும், மற்றொரு உறுப்பினருக்கு வேறொரு சட்டத்தையும் பின்பற்ற முடியுமா? அவ்வாறு இரு சட்டங்களை பின்பற்றினால் அந்தக் குடும்பத்தை நடத்த முடியுமா? இந்த கருத்தை நமது நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுகிறேன்.

இருவிதமான சட்டங்களால் நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியுமா? நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம் என்று அரசமைப்பு சாசனம் கூறுகிறது. இதற்கேற்ப பொது சிவில் சட்டத்தை வரையறுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம்" என்று தெரிவித்திருந்தார்.

சட்ட ஆணையம் ஜூன் 14-ம் தேதி முதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமான பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகள் உள்ளிட்டோரிடம் கருத்துக் கேட்கும் பணியினைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பொது சிவில் சட்டம் என்பது, மதத்தின் அடிப்பைடையில் இல்லாமல் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரேமாதிரியான பொதுவான சட்டத்தினை நடைமுறைப்படுத்ததேயாகும். இது திருமணம், விவாகரத்து, பழக்கவழக்கங்கள், தத்தெடுக்கும் உரிமை போன்ற தனிப்பட்ட விஷயங்களையும் கையாளுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE