பிரதமர் பேச்சு எதிரொலி | பொது சிவில் சட்டத்தை தீவிரமாக எதிர்க்க முஸ்லிம் சட்ட வாரியம் முடிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொது சிவில் சட்டம் முன்மொழிவை தீவிரமாக எதிர்ப்பது என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவெடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடந்த வாரியத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை வலியுறுத்திய சில மணி நேரத்தில் இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் அவசரக்கூட்டம் ஆன்லைனில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் சாதி, மதம், வழிபாடுகளைப் பொருட்படுத்தாமல், பொதுவான ஒரு சட்டத்தை உருவாக்கி செல்படுத்த முயற்சிக்கும் அனைவருக்கும் ஒரே பொது சிவில் சட்ட முன்மொழிவை தீவிரமாக எதிர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆன்லைன் கூட்டத்தில், ஏஐஎம்பிஎல்பி தலைவர், சாய்ஃபுல்லா ரஹ்மானி, மவுலானாக்கள் கலீத் ரஷீத் ஃபராங்கி மஹலி, இஸ்லாமிக் சென்டர் ஆஃப் இந்தியாவின் தலைவர் மற்றும் ஏஐஎம்பிஎல்பி, வழக்கறிஞர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் சட்ட ஆணையத்தின் முன் தங்களின் கருத்துக்களை மிகவும் வலிமையாக எடுத்துவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதேபோல் சட்ட ஆணையத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களும் இறுதி செய்யப்பட்டன.

பொது சிவில் சட்டம் குறித்த பிரதமரின் வலியுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்த மவுலானாக்கள் கலீத் ரஷீத் ஃபராங்கி மஹலி," பொது சிவில் சட்டத்தை அடிமுதல் நுனி வரை முழுவதுமாக ஏஐஎம்பிஎல்பி எதிர்க்கிறது. சட்ட ஆணையத்தின் முன்பு எங்களின் கருத்துக்களை தீவிரமாக முன்வைப்பதன் மூலம் அரசால் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தினை எதிர்ப்பதற்கான ஒரு உத்தியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இதற்காக செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் எல்லா முஸ்லிம் அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டனர். கடந்த பல ஆண்டுகளாகவே தேர்தல் நேரத்துக்கு முன்பு பொது சிவில் சட்டம் குறித்து பேசுவதை அரசியல்வாதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்போதும் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு இந்தப் பிரச்சினையைத் தொடங்கியுள்ளனர்.

பொது சிவில் சட்டம் முஸ்லிம்களை மட்டுமே பாதிக்கப்போவதில்லை என்று நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன். அது பெரும்பான்மை இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின்கள்,பார்சிகள் இன்னும்பிற சிறுபான்மையினரை பாதிக்கும். இந்தியாவில் ஒவ்வொரு 100 கிமீக்கும் மொழி மாறுபடுகிறது. இப்படியிருக்கையில் அனைத்து சமூகத்துக்கும் ஒரே மாதிரியான விதியை அமல்படுத்த முடியும். ஒவ்வொரு சமூகமும் வித்தியாசமான வழிபாட்டு முறை, சடங்குகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொருவரின் சொந்த நம்பிக்கைகளை சுதந்திரமாக கடைபிடிக்கும், வாழும் உரிமையை அரசியலமைப்பு வழங்கியுள்ளது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, போபாலில் , செவ்வாய்க்கிழமை பேசிய பிரதமர் மோடி,"பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தில் தாத்தா, பாட்டி, கணவன், மனைவி, மகன், மகள் என பல உறுப்பினர்கள் உள்ளனர். அந்த குடும்பத்தை சேர்ந்த ஓர் உறுப்பினருக்கு ஒரு சட்டமும், மற்றொரு உறுப்பினருக்கு வேறொரு சட்டத்தையும் பின்பற்ற முடியுமா? அவ்வாறு இரு சட்டங்களை பின்பற்றினால் அந்த குடும்பத்தை நடத்த முடியுமா? இந்த கருத்தை நமது நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுகிறேன்.

இருவிதமான சட்டங்களால் நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியுமா? நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம் என்று அரசமைப்பு சாசனம் கூறுகிறது. இதற்கேற்ப பொது சிவில் சட்டத்தை வரையறுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம்" என்று தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE