பெங்களூருவில் 1 கிலோ தக்காளியின் விலை ரூ.100-ஐ தொட்டது: தமிழகத்திலும் விலை அதிகரிக்க வாய்ப்பு

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்களூருவில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.100-ஐ தொட்டதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் வறட்சி நிலவுவ‌தால் சில வாரங்களாக தக்காளி, பீன்ஸ், கேரட், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்தது. கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.50-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தக்காளி அதிகமாக விளையும் கோலார் மாவட்டத்தில் திடீரென மழை பெய்தது. இதனால் தக்காளி சேதமடைந்து, அழுகும் நிலை ஏற்பட்டது.

இதனால் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.மார்க்கெட், யஷ்வந்த்புரம் மார்க்கெட், கிருஷ்ணராஜபுரம் மார்க்கெட் ஆகியவற்றுக்கு தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்தது. எனவே தக்காளிக்கு கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டதால் சில்லறை சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.70-ல் இருந்து அதிகரித்து நேற்று ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல பீன்ஸ் 1 கிலோ ரூ.120-க்கும், இஞ்சி 1 கிலோ விலை ரூ.220-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் தக்காளி, பீன்ஸ், இஞ்சி, கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE