ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்தபடி ஒரே நாளில் 5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

போபால் ராணி கமலபதி-ஜபல்பூர், கஜூராஹோ-போபால்-இந்தூர், மட்கான் (கோவா)-மும்பை, தார்வாட்-பெங்களூரு மற்றும் ஹாதியா-பாட்னா ஆகிய 5 வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

முக்கிய வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில்கள் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளதன் மூலம் முக்கிய சுற்றுலாத் தலங்கள் இணைக்கப்படுவதோடு அதற்கான பயண நேரம் குறையும்.

அதன்படி, ராணி கமலபதி -ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மகாகவுசல் பகுதியை (ஜபல்பூர்) மத்திய மண்டலத்துடன் (போபால்) இணைக்கும். மேலும், பெராகட், பச்மாரி, சத்புரா போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு மேம்படுத்தப்பட்ட இணைப்பை வழங்க இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உதவும். இதற்கு முன், இந்த வழித்தட அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது தற்போது அறிமுகப்படுத் தப்பட்டுள்ள வந்தேபாரத் ரயில் சுமார் 30 நிமிடங்கள் வேகமாகச் சென்றடையும்.

கஜூராஹோ-போபால்-இந்தூர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், மால்வா மண்டலம் (இந்தூர்) மற்றும் பந்தேல்கண்ட் பகுதியை(கஜூராஹோ) மத்திய பகுதியான போபாலுடன் இணைப்பதற்கு பயனளிக்கும். இது, மஹாகாலேஷ்வர், மண்டு, மகேஷ்வர், கஜூராஹோ, பன்னா போன்ற முக்கியமான சுற்றுலா தலங்களுக்கு இந்த வந்தேபாரத் ரயில்சேவை மிகவும் உதவியாக இருக்கும். வழக்கமான ரயிலைக் காட்டிலும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் இரண்டரை மணி நேரம் வேகமாக இருக்கும்.

அதேபோன்று, மட்கான் (கோவா)-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கோவாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும். இது, மும்பையின் சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினஸ் மற்றும் கோவாவின் மட்கான் ரயில் நிலையத்துக்கு இடையே விரைவான இணைப்பை வழங்கும். இந்த இரண்டு வழித்தடங்களுக்கான பயண நேரம் ஒரு மணிநேரம் மிச்சமாகும்.

தார்வாட்-பெங்களூரு வந்தேபாரத் கர்நாடகாவின் முக்கிய நகரங்களான-தார்வாட், ஹூப்பள்ளி மற்றும் தாவணகெரே-மாநில தலைநகரான பெங்களூருடன் இணைக்கும். இந்த வழித்தடத்தில் இயங்கும் அதிவேக ரயிலுடன் ஒப்பிடுகையில் பயண நேரம் வந்தே பாரத் எக்ஸ்பிரசில் 30 நிமிடங்கள் குறையும்.

இறுதியாக, ஹாதியா-பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜார்க்கண்ட் மற்றும் பிஹாருக்கான முதல்வந்தே பாரத் ரயிலாகும். இது, பாட்னாவிற்கும் ராஞ்சிக்கும் இடையேயான தொடர்பை மேம்படுத்து வதோடு, 1.25 மணி நேரத்தை மிச்சப்படுத்த உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE