மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறக்கம் - காயத்தால் மம்தா பானர்ஜிக்கு சிகிச்சை

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 8ல் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணம் சென்ற அவர், இன்று மதியம் கொல்கத்தா திரும்பினார். ஜல்பைகுரியில் இருந்து கொல்கத்தா செல்வதற்காக ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது, கனமழை பெய்ததால் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பைகுந்தபூர் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது கனமழை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது, முதல்வர் மம்தாவுக்கு காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, சிலிகுரி அருகே உள்ள செவோக் விமான தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதும் மம்தா அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் இடது முழங்கால் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டில் இருந்து அவர் சிகிச்சை எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, மருத்துவமனையில் இருந்து சர்க்கர நாற்காலியில் அமர்ந்தபடி மம்தா காரில் ஏறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE