மனிதாபிமானத்தோடு அணுகுவது பலவீனமல்ல - மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு அரணாக நிற்கும் பெண்களுக்கு ராணுவம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு ஆதரவாகப் போராடும் பெண்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனிதாபிமானத்தோடு தாங்கள் அணுகுவதை தங்களின் பலவீனமாகக் கருதி பெண்கள் கலவரக்காரர்களை ஆதரிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

மே மாதம் தொடங்கி.. கடந்த மே மாதம் தொடங்கியதிலிருந்தே மணிப்பூர் மாநிலம் வன்முறை பூமியாகப் பற்றி எரிகிறது. காரணம் மேதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையேயான மோதல். இதில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் களமிறங்கியுள்ளன.

மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மேதேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் குகி பழங்குடியினர். கடந்த மே மாதம் முதன்முதலாக நடந்த அமைதிப் பேரணியில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவி இரண்டு மாதங்களாகிறது.

ஏன் எதிர்ப்பு? மணிப்பூரின் மேதேயி மக்கள், பெரும்பான்மை இனத்தவர். இவர்கள் மாநிலத்தின் சமவெளிப் பகுதிகளில் வசிக்கிறார்கள். ஆட்சியிலும் அதிகாரத்திலும் இவர்களின் கொடியே அங்கு பறக்கிறது. மணிப்பூரின் புவியமைப்பை பொறுத்தளவில், சமவெளியின் பங்கு குறைவாகவும், மலைப்பாங்கு அதிகமாகவும் கொண்டுள்ளது. மலைப்பாங்கு நெடுக, குகி மற்றும் நாகர் பழங்குடி மக்களே வசிக்கின்றனர். 32 உட்பிரிவுகளைக் கொண்ட குகி மக்கள், மேதேயி மக்கள் அளவுக்கு முன்னேற வாய்ப்பின்றி பின்தங்கியே உள்ளனர்.

இந்நிலையில் மேதேயி மக்களின் பட்டியலின உரிமை குரலுக்கு, குகி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே சகலத்தையும் ஆக்கிரமித்து முன்னேறி இருக்கும் மேதேயி மக்கள், பழங்குடி பட்டியலுக்குள் வந்தால் தாங்கள் மேலும் நலிவடைந்துவிடுவோம் என அச்சம் தெரிவிக்கின்றனர் குகி மக்கள். இதுதான் இரு தரப்பினருக்கும் இடையேயான போராட்டத்துக்குக் காரணம்.

ஆயுதக் குழுக்களுக்கு கேடயமாக: இந்நிலையில் இந்தப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் பல செயல்படுகின்றன. இவர்கள்தான் வன்முறைக்கும் காரணமாக இருக்கின்றனர். இவர்களைக் கைது செய்தால் கலவரத்தைக் கட்டுப்படுத்தலாம் என்பதே ராணுவம், துணை ராணுவம், காவல்துறை என அனைத்து பாதுகாப்புப் படைகளின் ஒற்றை வலியுறுத்தலாக இருக்கிறது. ஆனால், இதற்கு தடையாக இருக்கின்றனர் பெண்கள்.

கலவரக்காரர்களை காக்கும் பெண்கள்: மணிப்பூரில் கேஒய்கேஎல் (Kanglei Yawol Kanna Lup) என்ற ஆயுதக் குழுவைச் சேர்ந்த 12 பேரை ராணுவத்தினர் கைது செய்தனர். ஆனால் அதனை எதிர்த்து பெண்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அமைதியை நிலைநாட்டும் பணிகளை மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டதால் ராணுவம் கைது செய்த 12 பேரை மீண்டும் ஒப்படைத்தது. இந்நிலையில், நேற்றிரவு இந்திய ராணுவத்தின் தி ஸ்பியர் கார்ப்ஸ் படைப்பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் களத்தில் கலவரக்காரர்களுக்கு அரணாக இருக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது. அதற்கு, மணிப்பூர் பெண்களின் அமைதிப் போராட்டத்தின் உண்மைப் பின்னணி என்று தலைப்பிட்டுள்ளது.

மனிதாபிமானம் பலவீனம் அல்ல: அந்த வீடியோவில், கடந்த சனிக்கிழமை இத்தாம் பகுதியில் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இடம்பெற்றிருக்கின்றனர். அசாம் ரைஃபில்ஸ் படைப்பிரிவினர் தளவாடங்களுடன் சென்று வரக்கூடிய முக்கியப் பாதை புல்டோசர் கொண்டு தோண்டப்படுகிறது. அதற்கு அரணாக பெண்கள் நிற்கின்றனர். அதேபோல் கார், ஆம்புலன்ஸ், டிராக்டர் எனப் பல வாகனங்களில் பெண்கள் புடைசூழ நடுவில் கலவரக்காரர்கள் ஆயுதங்களுடன் பத்திரமாக இத்தாமில் இருந்து வெளியேறுகின்றனர். இப்படி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கலவரக்காரர்களுக்கு ஆதரவாக மட்டுமே பெண்கள் களத்தில் நிற்கின்றனர். அவர்களை நாங்கள் மனிதாபிமானத்தோடு அணுகுகிறோம். அதனால் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்று அர்த்தமில்லை.

பாதுகாப்புப் படையினரை தடுப்பது என்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விடாமல் தடுக்கும் குற்றமும் கூட. ஆகையால் இரவு பகலாக மணிப்பூர் அமைதிக்காகப் போராடும் படைகளுக்கு உதவும்படி அனைத்துத் தரப்பு மக்களையும் ராணுவம் கேட்டுக் கொள்கிறது. மணிப்பூருக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்