கர்நாடகாவில் பருவ மழையால் நிரம்பும் அணைகள்: தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

கர்நாடக மாநிலம் முழுவதும் தொடர்ந்து 5 நாட்களாக பருவ மழை தீவிரமாக பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணசாகர், கபினி, ஹேமாவதி மற்றும் ஹாரங்கி ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களாக கர்நாடகா மற்றும் கேரள மாநிலம் வயநாட்டை சுற்றியுள்ள பகுதி களில் தென்மேற்குப் பருவ மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த‌த் தாழ்வு மண்டலம் உருவானதால் பருவ மழை தீவிரமடைந்தது.

மங்களூரில் அதிக மழை

மங்களூர், கார்வார், சிக்மகளூர், ஷிமோகா, ஹாசன் உள்ளிட்ட இடங்களில் இரவு பகலாக மழை பெய்து வருவதால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது. மடிக்கேரி பாகமண்டலா திருவேணி சங்கமத்தில் பெய்த கன மழையால் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து முழு மையாக பாதிக்கப்ப‌ட்டுள்ளது. பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு 70 மி.மீ மழையும் மங்களூரில் அதிகபட்சமாக 250மி.மீ. மழை யும் பதிவானது.

தலைகாவிரியில் வெள்ளம்

காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்துவருவ தால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் பலத்த மழை பெய்துவருகிறது. தலைக்காவிரி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப் பட்டுள்ளனர். திங்கள்கிழமை மாலை வரை குடகு மாவட்டத்தில் 90 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தலைக்காவிரியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நிரம்பும் கபினி

எனவே மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண சாகர் அணைக்கு வினாடிக்கு 6000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் வினாடிக்கு 363 கன அடி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. திங்கள் மாலை நிலவரப்படி 124.1 அடி உயரமுள்ள கிருஷ்ண சாகர் அணையில் 83.85 அடி நீர் நிரம்பி இருக்கிறது.

கேரளாவிலும் கர்நாடகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மைசூரில் உள்ள கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணைக்கு வினாடிக்கு 16500 கன அடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. இதில் தமிழகத்துக்கு வினாடிக்கு 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள‌து.

கிருஷ்ண சாகர், கபினி அணை களைப் போலவே காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் அமைந்திருந் திருக்கும் ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய பெரிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. கர்நாடகத்தில் தொடர்ந்து மழை பெய்தால் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்து அதிகரிக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE