மணிப்பூர் நிலவரம் | “பிரதமரிடம் பேசாத நாளில்லை” - அனைத்து கட்சிக் கூட்டத்தில் அமித் ஷா தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக டெல்லி நாடாளுமன்ற கட்டிடத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் சனிக்கிழமை தொடங்கியது. மாலை 3 மணிக்கு தொடங்கிய கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் பாஜக சார்பில் நித்யானந்த் ராய், பிரலாகத் ஜோஷி, ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் சார்பில் ஒ இபோபி சிங், சிவசேனா (உத்தவ் அணி) சார்பில் பிரியங்கா சதுர்வேதி, மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் டமாங், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் ட்ரெக் ஓ பிரென், மிசோரம் தேசிய முன்னணி சார்பில் சி லால்ரோசங்கா, பிஜேடி சார்பில் பினாகி மிஸ்ரா, அதிமுக சார்பில் தம்பிதுரை, திமுக சார்பில் திருச்சி சிவா, ஆர்ஜேடி சார்பில் மனோஷ் ஜா, சமாஜ்வாதி கட்சி சார்பில் ராம்கோபல் யாதவ், ஆம் ஆத்மி கட்சி சார்பில் சஞ்சய் சிங் உட்பட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தொடங்கிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் அமித் ஷா பேசியவை குறித்து பாஜகவின் மணிப்பூர் பொறுப்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன்படி, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், மே 3-ஆம் தேதி மணிப்பூரில் வன்முறை தொடங்கியதில் இருந்து, பிரதமர் மோடியிடம் நிலைமை குறித்து பேசாமலோ அல்லது பிரதமர் அறிவுறுத்தல் வழங்காமலோ ஒருநாள் கூட இல்லை என்றும் அமித் ஷா கூறியதாக சம்பித் பத்ரா தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும், அனைத்துக் கட்சிக் குழுவை மணிப்பூருக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கையாக எழுப்பின.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி திருச்சி சிவா, "காவல் துறை மற்றும் ராணுவம் அல்லது அசாம் ரைபிள்ஸ் மூலம் கட்டுப்படுத்த இது ஒன்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அல்ல. இது மாநில மற்றும் மத்திய அரசின் நிர்வாக தோல்வி. இதை எடுத்துச் சொல்லி, அனைத்துக் கட்சிக் குழுவை மணிப்பூருக்கு அனுப்ப வேண்டும் என்று இன்றைய கூட்டத்தில் கேட்டுக் கொண்டோம்.

அமித் ஷா, எங்கள் ஒவ்வொருவரின் பேச்சையும் அமைதியாக கேட்டார். பின்னர் எதிர்க்கட்சிகள் அரசை நம்ப வேண்டும் என கேட்டுக்கொண்ட அமித் ஷா, அமைதியை நான் மீட்டெடுப்பேன் என்றும் உறுதியளித்தார். கலவரம் நடந்து 50 நாட்களாகியும் பிரதமர் இதுபற்றி பேசாதது குறித்தும் கூட்டத்தில் நாங்கள் கவலை தெரிவித்தோம்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, மணிப்பூரில் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த மே 29-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்றார். மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டுவதற்காக நான்கு நாட்கள் தங்கியிருந்து குகி மற்றும் மைத்தி இன மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இருந்த போதிலும் அங்கு இன்னும் வன்முறை தொடர்ந்து வருகிறது.

இதனிடைய "மணிப்பூரில் மரணங்கள் மற்றும் பேரழிவு ஏற்பட்டு 50 நாட்கள் கடந்த பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது மிகவும் தாமதமான ஒன்று. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மணிப்பூர் மக்களிடம் பேசிய பின்னர் தான் மத்திய அரசு விழித்திருக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளாதது, அவரின் கோழைத்தனத்தையும், அவர் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள விரும்பாததையும் உணர்த்துகிறது.

இதற்கு முன் உள்துறை அமைச்சரே நேராக சென்று அங்குள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அமைதி ஏற்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் நிலைமை அதற்குப் பின்னர் மிகவும் மோசமடைந்தது. அவரது தலைமையில் எப்படி நாம் அமைதியை எதிர்பார்க்க முடியுமா?" என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வியாழக்கிழமை விமர்சித்திருந்தார்.

பின்னணி: மணிப்பூரில் மைத்தி சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3-ம் தேதி குகி பழங்குடியினர் அமைதிப் பேரணி நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும்மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இணைய சேவைகள் தடைசெய்யப்பட்டன. மாநிலத்தில் முழுமையாக இணைய சேவை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்