பாஜக அரசை வீழ்த்த 17 கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ளும்: பாட்னா கூட்டத்துக்குப் பின் நிதிஷ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பாட்னா: பாஜக தலைமையிலான மத்திய அரசை வீழ்த்த 17 கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் என்று பாட்னா எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்குப் பிறகு நிதிஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் இன்று (ஜூன் 23) நடைபெற்றது. பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவ சேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து, தலைவர்கள் அனைவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நிதிஷ் குமார். "இந்த ஆலோசனைக் கூட்டம் நல்ல முறையில் நடந்தது. பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். வரும் மக்களவைத் தேர்தலை 17 கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்கொள்வது என்ற முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் இமாச்சலப் பிரதேச தலைநகர் ஷிம்லாவில் அடுத்த மாதம் நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தலை இணைந்து எதிர்கொள்வதற்கு ஏற்ப பொதுத் திட்டத்தை வகுக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இதனை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவெடுப்போம். இணைந்து செயல்படுவதற்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியான திட்டங்களை வகுத்து செயல்படுவோம். மத்தியில் உள்ள பாஜகவை வீழ்த்துவதே எங்கள் இலக்கு" எனத் தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "எதிர்க்கட்சிகளுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாங்கள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வோம். நெகிழ்வுத்தன்மையுடன் பணியாற்றி, எங்கள் சித்தாந்தத்தை பாதுகாப்போம்" எனத் தெரிவித்தார்.

"நாங்கள் இணைந்துள்ளோம். இணைந்தே போட்டியிடுவோம். வரலாறு இங்கிருந்து துவங்குகிறது. வரலாறு மாற்றப்பட வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஆனால், வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த பாசிச அரசுக்கு எதிராக பேசுவதே எங்களின் நோக்கம்" என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, "எங்களுக்குள் சித்தாந்த வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், நாட்டின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்" என தெரிவித்தார்.

டெல்லி அரசின் அதிகாரம் தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்காததால் ஆம் ஆத்மி கட்சி அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் கருப்புச் சட்டம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட வேண்டும். இந்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி இதுவரை வெளிப்படையாக எதிர்க்கவில்லை. இது அதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. மாநிலங்களவையில் உள்ள எங்கள் கட்சியின் 31 எம்பிக்களும் இந்த சட்டத்தை எதிர்த்து வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி ஏன் அறிவிக்க மறுக்கிறது? காங்கிரஸ் கட்சி இவ்வாறு செயல்படும் நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்பது கடினம்" எனத் தெரிவித்துள்ளது.

பாஜக ரியாக்‌ஷன் என்ன? - எதிர்க்கட்சிகளின் பாட்னா கூட்டம் குறித்துப் பேசிய பாஜக மூத்த தலைவர் அமித் ஷா, "புகைப்படக் காட்சிக்காக அவர்கள் ஒன்றுகூடி இருக்கிறார்கள். பாஜவை எதிர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். எவ்வளவு முயன்றாலும் அவர்களால் ஒன்றிணைய முடியாது. ஒருவேளை அவர்கள் ஒன்றிணைந்தாலும் 300 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலாக வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதை மக்கள் உறுதி செய்வார்கள்" என்று தெரிவித்தார். அதேபோல், பாட்னாவில் எதிர்க்கட்சிகள் சேர்ந்திருப்பது சந்தர்ப்பவாத அரசியல் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

இதனிடையே "நிதிஷ் குமார், பாட்னாவில் வரும் 2024-ம் ஆண்டு தேர்தலுக்காக திருமண ஊர்வலம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இந்த ஊர்வலத்தின் மாப்பிள்ளை யார்? அங்கிருப்பவர்கள் அனைவரும் தங்களை பிரதமர் வேட்பாளராகவே கருதுகின்றனர்" என்று பிஹார் மாநில பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்