பாட்னா கூட்டம் | எதிர்க்கட்சிகள் சேர்ந்திருப்பது சந்தர்ப்பவாத அரசியல் - ஜெ.பி.நட்டா விமர்சனம்

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: பிஹார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் சேர்ந்திருப்பது சந்தர்ப்பவாத அரசியல் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

ஒடிசாவின் பவானிபட்னா நகரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா உரையாற்றினார். அவரது உரை விவரம்: "பாட்னாவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். நான் பாட்னாவில் பிறந்து, அங்கே பள்ளிக் கல்வியை கற்றவன் என்பதால், எனது சிறு வயது நாட்கள் நினைவுக்கு வந்தன.

ராகுல் காந்தியின் பாட்டியான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் 22 மாதங்கள் சிறை வைக்கப்பட்டவர் லாலு பிரசாத் யாதவ்; 20 மாதங்கள் சிறை வைக்கப்பட்டவர் நிதிஷ் குமார். பாட்னாவில் ராகுல் காந்தி வரவேற்கப்பட்டதைப் பார்த்தபோது, இவர்களின் அரசியல் எங்கே தொடங்கியது; தற்போது எங்கே வந்து நிற்கிறது என்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன்.

சிவ சேனா முன்னாள் தலைவர் பால் தாக்கரே, காங்கிரஸ் கட்சியை கடுமையாக எதிர்த்தவர். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்க வேண்டிய நிலை ஏற்படுமானால் கட்சியை கலைத்துவிடுவேன் என கூறியவர் அவர். ஆனால், அந்த வேலையை தற்போது தனது மகனே செய்வதை அவர் அறிந்தால், தன்னைத்தானே அவர் நொந்து கொள்வார்.

நமது நாட்டுக்கு புதிய அரசியல் கலாச்சாரத்தைக் கொடுத்திருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. வாரிசு மற்றும் குடும்ப அரசியலில் இருந்தும், வாக்கு வங்கி அரசியலில் இருந்தும் நாட்டை மீட்டு, வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளார். ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்தோம் என்பது குறித்து அறிக்கை அளிக்கும் அரசியல் மீது நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். என்ன வாக்குறுதி அளித்தோமோ அவற்றை நாம் நிறைவேற்றி இருக்கிறோம். என்ன வாக்குறுதி கொடுப்போமோ நிச்சயம் அவற்றை நிறைவேற்றுவோம்.

கல்வி அறிவு அற்றவர்களின் கூடாரமாக காங்கிரஸ் கட்சி முழுவதுமாக மாறிவிட்டது. தங்கள் மோசமான அரசியல் மூலம் மக்களை தவறாக வழிநடத்த அக்கட்சி முயல்கிறது. இத்தனை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துவிட்டு அவர்களும் தற்போது ஏழ்மை குறித்து பேசுகிறார்கள். நரேந்திர மோடி ஆட்சியில் ஏழ்மை 10 சதவீதத்துக்கும் கீழாக குறைந்துவிட்டது. கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் போர் ஆகியவற்றுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக உள்ளது. உலகின் பணவீக்கத்தைவிட இந்தியாவின் பணவீக்கம் குறைந்தே இருக்கிறது.

இந்தியாவை வளரும் நாடாக அல்லாமல்; வளர்ந்த நாடாக உலகின் முன் நிறுத்த பிரதமர் மோடி பாடுபடுகிறார். அவரது தலைமையில் நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியைப் பார்த்து உலகத் தலைவர்களும், பொருளாதார வல்லுநர்களும் பாராட்டுகிறார்கள். நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், மெட்ரோ ரயில்கள் ஆகியவற்றுக்காக கடந்த 9 ஆண்டுகளில் ரூ.18 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிட்டிருக்கிறது. இந்த ஆண்டு மேலும் ஒரு லட்சம் கோடியை செலவு செய்ய இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை 54 ஆயிரம் கிலோ மீட்டருக்கு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மெட்ரோ ரயில் சேவை 616 கிலோ மீட்டருக்கு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலை ஒரு நாளைக்கு 14.3 கிலோ மீட்டர் போடப்பட்டது. மோடி ஆட்சியில் அது 29 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் நாட்டில் 74 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டன. மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் புதிதாக 74 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியா எவ்வாறு உருமாறி வருகிறது என்பதற்கு இந்த புள்ளி விவரங்களே சாட்சி" என்று ஜெ.பி.நட்டா உரையாற்றினார்.

அமித் ஷா கருத்து: இதனிடையே, பிஹார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது குறித்துப் பேசிய அமித் ஷா, "புகைப்படக் காட்சிக்காக அவர்கள் ஒன்றுகூடி இருக்கிறார்கள். பாஜவை எதிர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். எவ்வளவு முயன்றாலும் அவர்களால் ஒன்றிணைய முடியாது. ஒருவேளை அவர்கள் ஒன்றிணைந்தாலும் 300 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலாக வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதை மக்கள் உறுதி செய்வார்கள்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE