“புகைப்படக் காட்சிக்கான ஒன்றுகூடல்” - எதிர்க்கட்சிகளின் பாட்னா கூட்டத்தை விமர்சித்த அமித் ஷா

By செய்திப்பிரிவு

ஜம்மு: காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரூ. 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டி உள்ளார். மேலும், பாட்னாவில் ஒருங்கிணைந்துள்ள எதிர்க்கட்சிகளை புகைப்படக் காட்சிக்காக ஒன்றுகூடியுள்ளதாக அவர் விமர்சித்தார்.

ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள அமித் ஷா, ஜம்மு நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: "காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரூ. 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. தற்போது நரேந்திர மோடி அரசு ஊழலுக்கு எதிரான வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரை மூன்று குடும்பங்கள்தான் பல பத்தாண்டுகளாக ஆட்சி செய்து வந்தன. சட்டப்பிரிவு 370 காரணமாக ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி ஏற்படவில்லை. அதோடு, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு 42 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

இத்தனை பேர் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு? தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா பொறுப்பேற்பாரா? மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி பொறுப்பேற்பாரா? ஆனால், அவர்கள் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டிருக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். நரேந்திர மோடி ஆட்சியில் பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று அமித் ஷா உரையாற்றினார்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது குறித்துப் பேசிய அமித் ஷா, "புகைப்படக் காட்சிக்காக அவர்கள் ஒன்றுகூடி இருக்கிறார்கள். பாஜவை எதிர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். எவ்வளவு முயன்றாலும் அவர்களால் ஒன்றிணைய முடியாது. ஒருவேளை அவர்கள் ஒன்றிணைந்தாலும் 300 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலாக வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதை மக்கள் உறுதி செய்வார்கள்" என்று தெரிவித்தார்.

கார்கே நம்பிக்கை: "பிஹாரில் வெற்றி பெற்றால், நாம் நாடு முழுவதும் வெற்றி பெற முடியும்" என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். | வாசிக்க > ‘பிஹாரை வென்றால் நாட்டை வெல்லலாம்’ - பாட்னா கூட்டத்துக்கு முன்னர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சுl

ராகுல் பேச்சு: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்பட பல மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை இழந்துவிட்டது என்றும், அங்கெல்லாம் பாஜகவை காண முடியாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். | வாசிக்க > பாஜக பல மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்துவிட்டது: பாட்னா கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE