எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் இதயங்களை இணைக்காது - மாயாவதி விமர்சனம்

By செய்திப்பிரிவு

லக்னோ: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ள கூட்டம் இதயங்களை விட கைகளை இணைத்துக் கொள்ளும் ஒரு சடங்காகவே இருக்கும் என்று பகுஜன் சமாஜ்
தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

வரும் 2024 மக்களவைத் தேர்தலையொட்டி பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ளார். இக்கூட்டத்துக்கு உ.பி. முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி அழைக்கப்படவில்லை.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி கூறும்போது, “வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்துப் போட்டியிட விரும்பும் கட்சிகளை மட்டுமே நாங்கள் அழைத்தோம். எங்கள் அணியில் இடம்பெற மாட்டோம் என பகுஜன் சமாஜ் கூறுகிறது. பிறகு எதற்கு எங்கள் நேரத்தை நாங்கள் வீணடிக்க வேண்டும்?” என்றார்.

இதையடுத்து ட்விட்டரில் மாயாவதி கூறியிருப்பதாவது: உ.பி.யில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு வெற்றி பெறுவது தேர்தல் வெற்றிக்கு முக்கியமானதாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் நோக்கம் பற்றி தீவிரமாகவும் உண்மையான அக்கறையுடனும் இருப்பதாகத் தெரியவில்லை.

பி.ஆர்.அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட மனிதநேய, சமத்துவ அரசியல் சாசனத்தை பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளால் செயல்படுத்த முடியவில்லை என்பது நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையிலிருந்து தெளிவாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிதிஷ் குமார் நடத்தும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இதயங்களை விட கைகளை இணைத்துக் கொள்ளும் ஒரு சடங்காகவே இருக்கும். இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE