வீடுகளுக்கு சென்று 11 வகை சான்றிதழ் வழங்கும் திட்டம் - ஆந்திராவில் இன்று முதல் அமல்

By என். மகேஷ்குமார்

அமராவதி: ஆந்திராவில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 11 வகையான சான்றிதழ்களை வழங்கும் ‘ஜெகனண்ணா சுரக்‌ஷா’ திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு, ‘ஜெகன் அண்ணனுக்கு சொல்வோம்’ என்ற திட்டம் இன்று முதல் அமலுக்கு வரும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், ’ஜெகன் அண்ணா சுரக்‌ஷா திட்டம்’ என்ற மற்றொரு புதிய திட்டமும் இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

ஜெகன் அண்ணனுக்கு சொல்வோம் என்ற திட்டம் மூலம் நிறை குறைகளை வீடு வீடாக சென்று எம்.பி,, எம்.எல்.ஏ.க்கள் கேட்டறிய உள்ளனர். இதில் பொதுமக்கள் கூறும் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டுமென முதல்வர் ஜெகன்மோகன் அறிவுறுத்தி உள்ளார்.

இதனிடையே, ஜெகனண்ணா சுரக்‌ஷா திட்டமும் இன்று முதல் அமல்படுத்தப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் மூலம் ஆந்திராவில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் வருவாய் அதிகாரிகள் சென்று, பிறப்பு, ஜாதி, இறப்பு, வருவாய் என 11 வகையான சான்றிதழ்களுக்கு பதிவு செய்தோரிடம் நேரில் சென்று ஆய்வு செய்து அந்த இடத்திலேயே சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக புதிய கம்ப்யூட்டர்கள் வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக பொது மக்களிடையே வாங்கப்படும் சர்-சார்ஜும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 11 சான்றிதழ்களும் அதற்காக விண்ணப்பித்த அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE