சமூக வலைதளங்களில் வைரலான ‘கோ பேக் ஸ்டாலின்’ - தமிழக முதல்வரின் பிஹார் பயணத்துக்கு எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பிஹார் மாநிலத்தில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘கோ பேக் ஸ்டாலின்’ ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக, மதச் சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் அனைத்து கட்சி கூட்டம் பிஹார் மாநிலம் பாட்னாவில் இன்று
நடைபெறவுள்ளது.

இதில், பங்கேற்பதற்காக அகில இந்திய அளவிலான முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பிஹார் செல்கின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.

இந்த நிலையில், பிஹாரில் தமிழக முதல்வரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் "கோ பேக் ஸ்டாலின்" ஹேஷ் டேக் ட்ரெண்டாகியுள்ளது. புதன்கிழமை
நிலவரப்படி அதனை 14,000-க்கும் அதிகமானோர் ட்வீட் செய்துள்ளனர்.

அரசியல் விமர்சகர் சந்தன் சர்மா இதுகுறித்து கூறுகையில், “வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டதாக மணிஷ் கஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே பிஹார் வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அம்மாநில மக்கள் சமூக வலைதளம் மூலம் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE