புதுடெல்லி: கலிங்கப் போரால் பாடம் கற்ற பின் போர் நடத்தாமலேயே மவுரியப் பேரரசை கட்டிக் காத்தார் மாமன்னர் அசோகர். அவரது தலைநகரான பாடலிபுத்திரம் எனும் பாட்னா, ஓர் அரசியல் போருக்கு தயாராகிறது. இதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று பாட்னாவில் நடைபெறுகிறது. பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் இதை முன்னின்று நடத்துகின்றனர்.
இக்கூட்டத்தில், மாநில முதல்வர்களான தமிழகத்தின் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, டெல்லியின் அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாபின் பகவந்த் சிங் மான், ஜார்க்கண்டின் ஹேமந்த் சோரன் ஆகியோருடன் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, அகிலேஷ் சிங் யாதவ், உத்தவ் தாக்கரே ஆகியோரும் ஒன்று கூடுகின்றனர். சரத் பவார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர். மொத்தம் 18 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கூடுகின்றன.
பாட்னாவில் தலைவர்கள் அனைவரும் தங்குவதற்கு முதல்வர் நிதிஷின் அரசு குடியிருப்புக்கு அருகிலுள்ள மாநில விருந்தினர் மாளிகைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலானத் தலைவர்கள் நேற்று இரவே பாட்னா வந்து விட்டனர். இவர்களில் 5 மாநில முதல்வர்கள் இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த
வளாகத்தில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த மாபெரும் கூட்டத்திற்கு எதிர்கட்சித் தலைவர்களை வரவேற்று, விமான நிலையம் தொடங்கி கூட்டம் நடைபெறும் முதல்வரின் அரசு குடியிருப்பு வரை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் அனைத்து கட்சி தலைவர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன. முக்கிய சாலைகளில் முதல்வர் நிதிஷ் குமாரை பாராட்டியும் பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில், ‘மனதில் தோன்றியபடி அல்ல! வேலை முடியும்படி! (மன் கீ நஹி! காம் கீ ஹய்!)’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
» ''சமூக நீதி மண்ணில் எதிர்க்கட்சிகளின் போர் முழக்கம்'' - பாட்னா சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின்
» பாட்னா கூட்டம் | ஒரு குடும்பமாக இருந்து பாஜகவை எதிர்ப்போம்: மம்தா பானர்ஜி
பாட்னாவில் சில கட்சிகளின் பிஹார் பிரிவுகளும் தங்கள் தலைவர்களை வரவேற்று பதாகைகள் வைத்துள்ளன. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை எதிர்காலப் பிரதமர் என்று கூறி ஆம் ஆத்மி கட்சி சுவரொட்டிகள் வரவேற்கின்றன. இதேபோன்று எதிர்காலப் பிரதமர் என ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவை வரவேற்று பிஹார் காங்கிரஸ் சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
லாலு வாழ்த்து: ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனரான லாலு பிரசாத் யாதவ், மருத்துவர்கள் அறிவுறுத்தலால் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் லாலு நேற்று மதியம் திடீரென முதல்வர் நிதிஷின் வீட்டுக்கு வந்து வாழ்த்து கூறியதுடன் சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார்.
பல்வேறு கொள்கைகள் கொண்டவர்களாக இருந்தும், மக்களவைத் தேர்தலுக்காக இவர்கள் ஒன்றுகூட முயற்சிக்கின்றனர். பாஜகவை வலுவுடன் எதிர்க்க, ஒவ்வொரு தொகுதியிலும் எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரே வேட்பாளர் எனும் முக்கிய நோக்கத்துடன் கூடுகின்றனர். இவர்களின் தோராயக் கணக்கின்படி சுமார் 180 தொகுதிகளில் பிராந்தியக் கட்சிகள் வலுவாக உள்ளன. இவற்றில் காங்கிரஸ் போட்டியிடாமல் ஒதுங்க வேண்டும் என இக்கட்சிகள் விரும்புகின்றன. இப்பட்டியலில் பஞ்சாப், டெல்லி, உ.பி., மேற்கு வங்கம்,
தெலங்கானா, கேரளா மற்றும் சில யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
சுமார் 220 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக இடையே நேரடிப் போட்டியை எதிர்க்கட்சிகள் எதிர்நோக்குகின்றன. இப்பட்டியலில் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், அருணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம், அசாம், ஆந்திரா, கர்நாடகா, உத்தராகண்ட், ஒடிசா மற்றும் சில யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
பிஹார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற மாநிலங்களின் 142 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. எனவே பாஜகவை நேரடியாக எதிர்க்கும் தொகுதிகளில் காங்கிரஸ் சுமார் 100 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இத்துடன் பிராந்தியக் கட்சிகள் குறைந்தபட்சமாக 100 தொகுதிகளிலும் காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள் 100 தொகுதிகளிலும் வென்றால்தான் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமையும் நிலை உள்ளது.
பிரதமர் வேட்பாளர்: எனவே இந்தவகை போட்டிக்காக ஒன்றுபட்ட கருத்துகளை இக்கூட்டத்தில் உருவாக்க முயல்கின்றனர். இதற்கு தடையாக இருக்கும் பிரதமர் வேட்பாளர் தொடர்பான முடிவை, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எடுக்க, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் விரும்புகின்றன. இவர்களது கூட்டத்தின் பலன் எதிர்வரும் சில நாட்களில் தெரிந்து
விடும் வாய்ப்புகள் உள்ளன. அப்போதுதான், மூன்றாம் முறையாக பிரதமராகத் தயாரகும் மோடியை இவர்கள் தடுக்க முடியுமா என்பதும் தெரியவரும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago