புதுடெல்லி: நாடு முழுவதிலும் சிறுபான்மையினர் வாக்குகளை பாஜக குறி வைக்கிறது. முதன்முறையாக தேசிய அளவில் சுமார் 70 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்க அக்கட்சி திட்டமிட்டு உள்ளது.
மாறிவரும் அரசியல் சூழலில் அடுத்த வருடம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் அமைக்கும் வியூகத்தை பொறுத்து வெற்றி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய, பிஹாரின் பாட்னாவில் 27 கட்சிகளின் தலைவர்கள் நாளை கூட உள்ளனர்.
அதேசமயம் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் மத்தியில் ஆளும் பாஜகவும் வியூகம் அமைக்கிறது. இதில், முதன்முறையாக முஸ்லிம்களின் வாக்குகள் முக்கிய பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையும் பாஜக, சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை ஆட்சி அமைக்கப் பயன்படுத்தியது. சமீபகாலமாகத் தாம் போட்டியிட்ட மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் ஒரு முஸ்லிமை கூட போட்டியிட வைக்கவில்லை.
இதுபோல் அல்லாமல் வரும் மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக முஸ்லிம்களுக்கும் தம் கட்சி சார்பில் வாய்ப்பளிக்க உள்ளது. இதற்கு 2014-ல் வீசத் துவங்கிய ‘மோடி புயலின்’ வீரியம் குறைந்திருப்பது காரணமாகக் கூறப்படுகிறது. இதை சமாளிக்க பாஜகவிற்கு மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் வாக்குகளும் தேவைப்படுகிறது.
மோடியின் திட்டம்: பாஜக நடத்திய ஆய்வின்படி, நாடு முழுவதிலும் சுமார் 70 தொகுதிகளில் முஸ்லிம்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர். இவற்றில், முஸ்லிம்களை போட்டியிட வைப்பதால் தம் கட்சி மீதான களங்கத்தை போக்க முடியும் எனவும் பாஜக நம்புகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமான இது, கடந்த வருடம் ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் திட்டம், சமீபத்தில் முடிந்த உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் போட்டியிட்ட சுமார் 400 முஸ்லிம்களில் சுமார் 60 பேர் வெற்றி பெற்றனர். இதன் பலனாக, மக்களவை தேர்தலிலும் தனது முஸ்லிம்கள் சூத்திரத்தை அமலாக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, எதிர்க்கட்சிகள் இனி பாஜகவை ‘முஸ்லிம் விரோதக் கட்சி’ எனக் குற்றம் சுமத்த முடியாத நிலை ஏற்படும்.
பாஜகவின் புதிய திட்டத்தில் கேரளாவில் ராகுல் காந்தி வென்ற வயநாடு முக்கிய இடம் பெற்றுள்ளது. இங்கு பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி குறித்து அவரது கட்சியின் முன்னாள் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூட்டம் நடத்தினார். வயநாடு உள்ளிட்ட 70 தொகுதிகளிலும் பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தனியாகக் குழு அமைத்து களம் இறங்க உள்ளது. இதில், பெண்களுக்காக என கருத்தரங்குகளும், சிறப்புக்கூட்டங்களும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
முஸ்லிம் வாக்காளர்கள் நிறைந்த தொகுதிகளாக, உ.பி.யில் மிக அதிகமாக சுமார் 20 தொகுதிகள் உள்ளன. அடுத்த நிலையில் மேற்கு வங்கத்தில் 15 உள்ளன. கேரளா மற்றும் அசாமில் தலா 6 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் 5, பிஹாரில் 4 மற்றும் மத்திய பிரதேசத்தில் 3 தொகுதிகள் உள்ளன. மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவிலும் ஒரிரு தொகுதிகளை பாஜக ஆராய்ந்து அறிந்துள்ளது. இப்பட்டியலில், ஹரியாணா, டெல்லி, கோவா மற்றும் லட்சத் தீவிலும் தலா ஒரு தொகுதி முஸ்லிம்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago