புதுடெல்லி: விருந்தினர் என்பவர் கடவுளுக்குச் சமம் என்பதே இந்திய சுற்றுலாவின் அடிப்படை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கோவாவில் இன்று நடைபெற்ற ஜி20 சுற்றுலாத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பதிவு செய்யப்பட்ட காணொளி உரை ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் கூறி இருப்பதாவது: "சுற்றுலாவுக்கான இந்தியாவின் அணுகுமுறை பழங்கால சமஸ்கிருத வசனமான ‘அதிதி தேவோ பவ’ அதாவது ‘விருந்தினர் கடவுளுக்குச் சமம்’ என்பதை அடிப்படையாகக் கொண்டது. சுற்றுலா என்பது சுற்றிப் பார்ப்பது மட்டுமல்ல, அது ஒரு ஆழமான அனுபவம். இசை அல்லது உணவு, கலை அல்லது கலாச்சாரம் எதுவாக இருந்தாலும், இந்தியாவின் பன்முகத்தன்மை உண்மையிலேயே கம்பீரமானது.
உயர்ந்த இமயமலை முதல் அடர்ந்த காடுகள் வரை, வறண்ட பாலைவனங்கள் முதல் அழகான கடற்கரைகள் வரை, சாகச விளையாட்டுக்கள் முதல் தியானம் வரை இந்தியாவில் நிறைய இருக்கிறது. சுற்றுலாவுக்கான உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. அதே வேளையில், இந்தியா தனது வளமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.
உலகின் அனைத்து முக்கிய மதங்களின் பக்தர்களையும் இந்தியா ஈர்க்கிறது. முக்கிய ஆன்மீக மையங்களில் ஒன்றான வாரணாசியில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதன் மூலம் பக்தர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்து இன்று 7 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியா புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்கி வருகிறது. உலகிலேயே மிக உயரமான சிலையான ஒற்றுமை சிலை இதற்கு ஒரு உதாரணம். இது திறக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள் சுமார் 27 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், நாட்டின் ஒட்டுமொத்த சுற்றுலா சூழலை மேம்படுத்துவதில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளோம்.
» கர்நாடகாவுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பது ஏழைகளுக்கு எதிரான செயல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
போக்குவரத்து உள்கட்டமைப்பு முதல் விருந்தோம்பல் துறை வரை, திறன் மேம்பாடு முதல், விசா சீர்திருத்தம் வரை பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவாக அடைவதற்கு சுற்றுலாத் துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அங்கீகரித்து இந்தியா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாட்டில் பேசப்படும் பல்வேறு மொழிகளின் மொழிபெயர்ப்பை உடனுக்குடன் செய்யும் செயற்கை நுண்ணறிவை நோக்கி இந்தியா செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசாங்கங்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு இருப்பதால், சுற்றுலாத் துறையில் இத்தகைய தொழில்நுட்பங்களை விரைவுபடுத்த முடியும். பயங்கரவாதம் பிரிக்கிறது; ஆனால் சுற்றுலா ஒன்றுபடுத்துகிறது. அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து, இணக்கமான சமுதாயத்தை உருவாக்கும் ஆற்றல் சுற்றுலாவுக்கு உள்ளது. இந்தியாவின் G20 தலைமையின் குறிக்கோள், 'உலகம் ஒரு குடும்பம்' என்பதாகும். 'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்பது உலக சுற்றுலாவுக்கான குறிக்கோளாக இருக்கலாம்.
இந்தியா பண்டிகைகளின் பூமி. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் எனும் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி வாக்காளர்கள், ஜனநாயக விழுமியங்கள் மீதான தங்களின் நிலையான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் பங்கேற்க இருக்கிறார்கள். 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். இந்த விழா, அதன் அனைத்து விதமான பன்முகத்தன்மையையும் கொண்டிருக்கும். இந்திய ஜனநாயகத்தின் அந்த திருவிழாவைக் காண நீங்கள் இந்தியா வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago