‘எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மத்திய அரசின் அவசர சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்’: கேஜ்ரிவால் வேண்டுகோள் 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜூன் 23-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், டெல்லி அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசரச் சட்டம் குறித்து தலைவர்கள் விவாதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கான கூட்டு வியூகத்தை வகுப்பதற்காக பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 23) பாட்னாவில் நடைபெற இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில், டெல்லியின் நிர்வாக அதிகார மாற்றம் குறித்த மத்திய அரசின் அவசர சட்டத்தை மாநிலங்களவையில் தோற்கடிப்பது குறித்து முதல் விஷயமாக விவாதிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், "இந்த அவசர சட்டத்தின் மூலம் மத்திய அரசு டெல்லியில் ஒரு சோதனை முயற்சியை மேற்கொள்ள இருக்கிறது. அது வெற்றி பெற்றால், பாஜக ஆளாத மாநிலங்களிலும் இது போன்ற அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து பட்டியலில் உள்ள மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைப் பறிக்கும். ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் மூலம் 33 மாநிலங்களிலும் பிரதமரே ஆட்சி செய்யும் நாள் வெகு தூரத்தில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

பின்னணி: முன்னதாக, தேசிய தலைநகர் டெல்லியில் குரூப் - ஏ அதிகாரிகளை இடம்மாற்றம் செய்வதற்கும், பணியமர்த்துவதற்கும் ஒரு அதிகார அமைப்பை உருவாக்குவதற்கான அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு மே 19-ம் தேதி கொண்டு வந்தது. இதன்படி, டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகள், டாமன் டையு, தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் குடிமைப் பணி (டிஏஎன்ஐசிஎஸ்) பிரிவைச் சேர்ந்த டெல்லி அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

டெல்லி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு “டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும். டெல்லி அரசுக்கு பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் உள்ளன. குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கே உள்ளது” எனத் தீர்ப்பளித்து ஒருவாரத்துக்கு பின்னர் இந்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மே 11-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பு டெல்லி அரசின் அனைத்து அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணியமர்த்தும் அதிகாரம் டெல்லியின் துணைநிலை ஆளுநர் வசமே இருந்தது.

இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்பு, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களை அணுகி சட்டத்திற்கு எதிராக ஆதாரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE