செந்தில்பாலாஜி வழக்கு | உயர் நீதிமன்ற விசாரணையை ஏன் சந்தேகிக்க வேண்டும்? - அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: செந்தில்பாலாஜி வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற விசாரணையை ஏன் சந்தேகிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. பின்னர், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜியை காவிரி மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளித்தது.

அப்போது, செந்தில்பாலாஜியை 16 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. அதற்கு, 8 நாட்கள் அனுமதி அளித்த உயர் நீதிமன்றம், விசாரணைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இதன் காரணமாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, கோடைக்கால சிறப்பு அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது சரியானது அல்ல. ஒருவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்போது இதுபோன்ற மனுவை பரிசீலிப்பதே தவறு. இது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும்.

செந்தில்பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளித்ததும் ஏற்கத்தக்கதல்ல. செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

அவரது வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், "செந்தில்பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீது உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றத்தை சந்தேகிக்க முடியாது. உயர் நீதிமன்றம் தவறாக நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது எனக் கருத வேண்டாம். உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறதே தவிர, ஆட்கொணர்வு மனுவை ஏற்றுக் கொள்ளவில்லை. உயர் நீதிமன்றத்தை அமலாக்கத் துறை ஏன் சந்தேகிக்க வேண்டும்? வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றத்தில் தொடரலாமே? தற்போதைய நிலையில், வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுவதுதான் சரியாக இருக்கும்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, வேண்டுமானால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். தற்போதைய நிலையில், அமலாக்கத் துறை ஏன் தனது முறையீட்டை உயர் நீதிமன்றத்தில் வைக்கக்கூடாது? நீங்கள் கூறுவதுபோல், மருத்துவமனையில் இருக்கும்போது செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பது சரியாக இருக்குமா? சிகிச்சை முடிந்த பின் அவரிடம் விசாரணை நடத்தலாமே?" என பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்றே உத்தரவை பிறப்பிக்குமா அல்லது சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசாரணை நாளை என்ன கட்டத்தை எட்டுகிறது என்பதை அறிந்து அதன் பிறகு முடிவு எடுக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்