ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிக்னல் இளநிலை பொறியாளரிடம் சிபிஐ விசாரணை

By செய்திப்பிரிவு

பாலசோர்: ஒடிசா ரயில் விபத்து குறித்து விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், சிக்னல் இளநிலை பொறியாளர் ஒருவரிடம் விசாரணை நடத்தினர். வீட்டில் அவரிடம் மேலும் விசாரிக்க வாய்ப்புள்ள நிலையில் அவரது வீட்டுக்கு ‘சீல்’ வைத்துள்ளனர்.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகில் கடந்த ஜூன் 2-ம் தேதி, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் மாறிச் சென்று, நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன. சில பெட்டிகள் பக்கத்து ரயில் பாதையில் விழுந்தன. அப்போது எதிர்திசையில் ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், தடம்புரண்ட சில பெட்டிகள் மீது மோதியது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 292 பயணிகள் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பாலசோர் ரயில் நிலையத்தில் அரசு ரயில்வே போலீஸார் பதிவு செய்த எப்ஐஆர் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜூன் 6-ம் தேதி விசாரணையை தொடங்கினர். பாஹாநாகா ரயில் நிலையத்தில் ஆதாரங்களை பாதுகாப்பதற்காக அங்குள்ள ரிலே அறை, பேனல் மற்றும் பிற சாதனங்களுக்கு சிபிஐ ‘சீல்’ வைத்துள்ளது.

இந்த ரயில் நிலையத்தில் பணியாற்றியவர்கள் உட்பட ரயில்வே அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தி, அவர்களின் மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளது.

விபத்துக்கான காரணத்தை கண்டறிய, தடயவியல் ஆய்வுக்காக, ஆவணங்கள் அறையிலிருந்து விபத்துக்கு முன்னரும் பின்னரும் பதிவான டிஜிட்டல் லாக் மற்றும் லாக் புக் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் சோரோ பிரிவின் கீழ் பணியாற்றி வரும் சிக்னல் இளநிலை பொறியாளர் ஒருவரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இதையடுத்து பாலசோரில் உள்ள அவரது வீட்டுக்கு ‘சீல்’ வைத்துள்ளனர்.

சிபிஐ-யின் 5 அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்று ‘சீல்’ வைத்ததாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்து நடந்ததில் இருந்து அந்த வீடு பூட்டியே இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “அந்த பொறியாளரை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு அழைத்துவந்து விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. எனவே வீட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அந்த பொறியாளர் முன்னிலையில் வீடு திறக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE