உ.பி.யில் பிரம்மோஸ், ட்ரோன்கள் தயாரிக்கப்படும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேசத்தின் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) தயாரிக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா, அலிகர், ஜான்சி, கான்பூர், லக்னோ உள்ளிட்ட 6 பகுதிகளை ஒன்றிணைத்து பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொழில் வழித்தடத்தில் லக்னோவில் ரூ.300 கோடி செலவில் 80 ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டில் புதியஆலையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்தபிறகு ஆண்டுதோறும் 100 பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க முடியும். அதோடு உத்தர பிரதேச பாதுகாப்பு வழித்தடத்தில் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) தயாரிக்கும் பல்வேறு ஆலைகளும் தொடங்கப்பட்டு வருகின்றன.

ட்ரோன்கள் உட்பட பாதுகாப்பு துறை சார்ந்த ஆயுதங்கள், தளவாடங்களை தயாரிப்பது தொடர்பாக இதுவரை 108 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்த சூழலில் உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: கடந்த 1971-ம் ஆண்டு போர் மற்றும் கார்கில் போரின்போது சில நாடுகள் இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்க மறுத்துவிட்டன. அந்த நாடுகளின் பெயர்களை இப்போது குறிப்பிட விரும்பவில்லை. மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறை சார்ந்த ஆயுதங்கள், தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

உத்தர பிரதேச பாதுகாப்பு வழித்தடம் சுமார் 1,700 ஹெக்டேர் பரப்பளவில் அமைகிறது. இதில் 95 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இதுவரை சுமார் ரூ16,000 கோடி அளவுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பாதுகாப்பு வழித்தடத்தில் சாதாரண நட்டு, போல்டு தயாரிக்கப்படாது. அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகள், ட்ரோன்கள் தயாரிக்கப்பட உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் ஆயுதங்களின் மூலம் முப்படை களும் நவீனப்படுத்தப்படும்.

இருமுனை (பாகிஸ்தான், சீனா)அச்சுறுத்தலை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் ஆயுத தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்காமல் உள்நாட்டிலேயே ஆயுத உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி தீவிரம் காட்டி வருகிறார். ஒரு காலத்தில் இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்க சில நாடுகள் மறுத்தன. ஆனால் இப்போது இந்தியா பேசுகிறது. அதை ஒட்டுமொத்த உலகமும் கேட்கிறது. இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE