கடந்த 9 ஆண்டு கால மோடி ஆட்சியில் எப்போதும் இல்லாத வகையில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது - ஜே.பி.நட்டா தகவல்

By செய்திப்பிரிவு

அகர்தலா: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு திரிபுரா மாநிலம் சன்டிர்பஜார் பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:

இந்தியா முன்பு ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற நாடாக விளங்கியது. இப்போது சிறந்த நிர்வாகம் மற்றும் அனைத்து நிலையிலும் வளர்ச்சி ஆகிய காரணங்களால் உலக நாடுகள் இந்தியாவை மதிக்கின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ், முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் தலைவிதியையே அவர் மாற்றி உள்ளார்.

குறிப்பாக, சர்வதேச எல்லையை பாதுகாக்க 13,125 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 முதல் 2022 வரையில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.18 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டில் புதிதாக 74 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

நாட்டின் நிதி நிலை வலிமையாக உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர், கரோனா வைரஸ் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சீராக உள்ளது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பணவீக்கம் குறைவாக உள்ளது. இவ்வாறு நட்டா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE