புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரான்பூர் மாவட்டம், தியோபந்தில் உலகப் புகழ்பெற்ற தாரூல் உலூம் மதரஸா உள்ளது. சுமார் 4,000 மாணவர்கள் பயில்கின்றனர். இது கடந்த1866-ல் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் நன்மதிப்பை இந்த மதரஸா பெற்றுள்ளது.
இங்கு மாணவர்களுக்கு இஸ்லாமிய மறைக் கல்வியுடன் ஆங்கிலம், அறிவியல், கணிதம் போன்ற பொதுக் கல்வியும் போதிக்கப்படுகிறது. இதன்பலனாக மதரஸாவில் படித்த பிறகு இதர பொதுக் கல்வி நிறுவனங்களிலும் இம்மாணவர்கள் சேர்ந்து உயர்க்கல்வி பயில்வது உண்டு. இதற்கு அவர்களுக்கு ஆங்கிலம் மிகவும் அவசியமாக உள்ளது.
மதரஸாவில் ஆங்கிலம் மொழிப்பாடமாக இருப்பினும் மாணவர்கள் பலர் கூடுதல் பயிற்சிக்காக வெளியில் உள்ள பயிற்சி நிலையங்களில் ஆங்கில வகுப்புக்குச் செல்கின்றனர். இதனால் மதரஸா கல்வி தடைபடுவதாக தாரூல் உலூம் நிர்வாகம் கருதுகிறது.
இந்நிலையில் ஆங்கிலப் பயிற்சிக்காக மாணவர்கள் வெளியில் சென்றால் அவர்கள் மதரஸாவில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மதரஸா நிர்வாகம் கடந்த 12-ம் தேதி அறிவித்தது. இந்த உத்தரவுக்கு பெரும்பாலான மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இப்பிரச்சினையில் மதரஸாக்களின் நிர்வாகங்களில் முக்கியப் பங்கு கொண்ட ஜமாத்-எ-உலாமா-எ-ஹிந்த் எனும் முஸ்லிம் சமூகநல அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி கூறும்போது, “மதரஸா கல்வி முடிந்த பின் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் உள்ளிட்டவை பயிலச் செல்லலாம். அவர்கள் ஒரே சமயத்தில் 2 படகுகளில் சவாரி செய்ய முடியாது” என்றார்.
இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தியோபந்த் மதரஸா செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் உஸ்மானி கூறும்போது, “மதரஸா உள்ளேயே ஆங்கிலம் பயிற்றுவிக்கப் படுகிறது. இதை வெளியிலும் சென்று பயில்வதால் சிக்கல் ஏற்படுகிறது என்பதால் மாணவர்கள் நலன் கருதி இந்த உத்தரவு வெளியிடப்பட்டது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில். தாரூல் உலூம் மதரஸா நிர்வாகத்துக்கு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் மாணவர்கள் ஆங்கிலம் கற்கத் தடை குறித்து 21-ம் தேதி நேரில் விளக்கம் அளிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை சர் சையது அகமது கான் எனும் அறிஞர் 1875-ல் தொடங்கினார். அப்போது மதரஸா கல்வியுடன், “அறிவியலும், ஆங்கிலமும் பயின்றால்தான் இஸ்லாமியர்களால் முன்னேற முடியும்” என்று அவர் குறிப்பிட்டார். இதனால் சர் சையது அகமது கான் மீது அவர் ஒரு இஸ்லாமியர் அல்ல என்று மவுலானாக்கள் ஃபத்வா அளித்தனர். பிறகு மவுலானாக்களே அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இணைந்து ஆங்கிலமும், அறிவியலும் பயின்று சிறந்து விளங்குவது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 secs ago
இந்தியா
47 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago