அகமதாபாத்: குஜராத் மாநிலத்தைக் கடந்த சில நாட்களாக அச்சுறுத்திய பிப்பர்ஜாய் புயல் கரையைக் கடந்த நிலையில், அது ராஜஸ்தானை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிப்பர்ஜாய் புயல் பாதிப்பு: அரபிக் கடலில் உருவான பிப்பர்ஜாய் புயல், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜாக்குவா போர்ட் அருகே நேற்று மாலை கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்த புயல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். 23 பேர் காயமடைந்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட மரங்களும் ஏராளமான மின்சாரக் கம்பங்களும் முறிந்து கீழே விழுந்துள்ளன. சில இடங்களில் டிரான்ஸ்பார்மர்களும் கீழே விழுந்துள்ளன.
» ஐநா சபையில் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி
"வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்": இதனால், கட்ச் மாவட்டம் உள்பட குஜராத்தின் ஒரு சில மாவட்டங்களில் மின்சாரம் தடை பட்டுள்ளது. 940 கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காற்றும் வேகமாக வீசி வருவதால் கடலோர மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை அசாதாரணமாக இருப்பதால் தற்போது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் புயல் முழுமையாக கடந்த பிறகு வெளியே வரலாம் என்றும் பூஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புப் படை விளக்கம்: புயல் கரையைக் கடப்பதற்கு முன் இருவர் உயிரிழந்ததாகவும், கரையைக் கடந்த பிறகு உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைநகர் அதுல் கார்வால் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "24 விலங்குகள் உயிரிழந்துள்ளன. 23 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் ஆயிரம் கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 800 மரங்கள் கீழே விழுந்துள்ளன. ராஜ்கோட் நகரைத் தவிர வேறு எங்கும் கனமழை இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
சாலையில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, தீ அணைப்புத் துறை உள்ளிட்ட துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு பல்வேறு இடங்களில் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புயல் பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, "இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை. சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். சில பகுதிகளில் புயலில் சிக்கிய மக்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். முதல்வர் பூபேந்திர படேல், புயல் பாதிப்பு குறித்து காந்தி நகரில் ஆய்வு மேற்கொண்டார்.
ராஜஸ்தானை நோக்கி...: குஜராத்தில் கரையைக் கடந்த பிப்பர்ஜாய் புயல், ராஜஸ்தானை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக ராஜஸ்தானின் ஜலோர், பார்மெர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 60-70 மில்லி மீட்டர் மழை பதிவாகி வருவதாகத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இவ்விரு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதிகபட்சமாக 200 மில்லி மீட்டர் மழை பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் மாநில பேரிடர் மீட்புப் படை: புயல் ராஜஸ்தானை நோக்கி நகர்வதை அடுத்து அம்மாநிலத்தில் மாநில பாதுகாப்புப் படையின் 17 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த ராஜஸ்தான் தலைமை செயலர் உஷா ஷர்மா, புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜலோர் மற்றும் பார்மர் மாவட்டங்கள் புயலால் அதிகம் பாதிக்கப்படும் என்றும் காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 17 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 30 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது படிப்படியாக குறைந்து வரும் புயலின் வேகம், இன்று மாலைக்குள் பெருமளவில் குறைந்துவிடும் எனக் கணித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago