‘அற்பத்தனமான பழிவாங்கும் செயல் ’ - நேரு நினைவு அருங்காட்சியக பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (என்எம்எம்எல்), பிரதம மந்திரி அருங்காட்சியகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாக வெளியான செய்தி குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் இன்று (ஜூன் 16) கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் "அற்பத்தனம் மற்றும் பழிவாங்கும் செயல் அதன் பெயர் மோடி" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்,பி.,யும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"அற்பத்தனம் மற்றும் பழிவாங்கும் செயல் அதன் பெயர் மோடி. கடந்த 59 ஆண்டுகளாக நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் சர்வதேச அறிவு சார் அடையாளமாகவும், புத்தகங்கள் மற்றும் ஆவணங்களின் புதையல் தீவாகவும் இருந்துள்ளது. இனி அது பிரதம மந்திரி அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும். இந்திய தேசிய அரசின் அரசியல் சிற்பியின் பெயர் மற்றும் பாரம்பரியத்தை அழிக்க, மறைக்க மோடி எதையும் செய்வார். பாதுகாப்பின்மை எண்ணம் காரமாக சிறுமையைச் சுமந்து திரியும் சிறிய மனிதர்". என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

என்எம்எம்எல் சொசைட்டியின் துணைத்தலைவரான பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடந்த அதன் சிறப்பு கூட்டத்தில் அந்த வளாகத்துக்கு வைக்கப்பட்டுள்ள நேருவின் பெயரை நீக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. நேரு நினைவு அருங்காட்சியம் மற்றும் நூலகம் இனி பிரதம மந்திரி அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

என்எம்எம்எல் சொசைட்டியின் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். அவர் தவிர உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர்கள் அனுராக் தாக்குர், தர்மேந்திர பிரதான், ஜி கிஷண் ரெட்டி, நிர்மலா சீதாராமான் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்: ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்ட நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், ‘நவீன மற்றும் தற்கால இந்தியா’பற்றி மேம்பட்ட ஆராய்ச்சியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீன் மூர்த்தி வளாகத்தில் அமைந்துள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் 1964- ம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் மறைவுக்கு பின்னர் நிறுவப்பட்டது. இதனை அப்போதைய குடியரசுத்தலைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

முன்னதாக தீன் மூர்த்தி பவன் கடந்த 1948ம் ஆண்டு முதல் மே 27, 1964 வரை முன்னாள் பிரதமர் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்து வந்தது நினைவுகூரத்தக்கது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டு அதாவது 2022, ஏப்ரலில் அனைத்து பிரதமர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாக பிரதமர் நினைவு அருங்காட்சியகமாக மீண்டும் திறப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE