கர்நாடகா | பாஜக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட‌ மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய முடிவு - பசவராஜ் பொம்மை கண்டனம்

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள‌னர்.

கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் 2022-ம் ஆண்டு மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு காங்கிரஸ் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்டத்தின்படி மதமாற்றம் செய்தால் 3 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, அதிகபட்சமாக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். திருமண காரணங்களுக்காக மதம் மாறுவோர் 30 நாட்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோரிடம் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த சட்டத்தை மீறி மதமாற்றம் செய்ததாக 10-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ போதகர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே தற்போதைய முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்த சட்டம் ரத்து செய்யப்படும் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் கர்நாடக அரசின் தலைமை செயலகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதமாற்ற தடை சட்டம் மற்றும் பசுவதை தடுப்பு சட்டம் ஆகியவற்றை வருகிற கூட்டத்தொடரில் ரத்து செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதேபோல பள்ளி பாடநூலில் இடம்பெற்றுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பற்றிய தகவல்கள், இந்துத்துவா கருத்துகள் ஆகியவற்றை நீக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு கர்நாடக சட்டம் மற்றும் சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறும்போது, “கடந்த பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக‌ அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் அனைவரின் ஒப்புதலுடன் அந்த சட்டத்தை ரத்து செய்ய‌ முடிவெடுக்கப்பட்டது. வருகிற 3-ம் தேதி கூடும் கூட்டத் தொடரின்போது அந்த சட்டம் ரத்து செய்யப்படும். அதேபோல பாடநூலில் இடம்பெற்றுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர்கள் குறித்த பாடங்களை நீக்கவும் முடிவெடுக்கப்பட்டது. பள்ளிகளில் தினமும் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிப்பதை கட்டாயமாக்கவும் முடிவெடுக்கப்பட்டது'' என்றார்.

காங்கிரஸின் இந்த முடிவுக்கு முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலை முன்னெடுப்பது உறுதியாகியுள்ளது. இந்துக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. காங்கிரஸை கண்டித்து பாஜக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்''என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE