நடைப்பயிற்சி சென்ற பிஹார் முதல்வரை நோக்கி பைக்கை செலுத்திய மர்ம நபர்கள் கைது

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை காலை வழக்கமான நடைபயணம் மேற்கொண்ட போது அடையாளம் தெரியாத இருவர் பைக் ஒன்றில் பாதுகாப்பை மீறி முதல்வரை நோக்கி வந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த முதல்வரின் பாதுகாப்புப் பணியில் இருந்த ஒருவர் கூறியதாவது:"முதல்வர் வழக்கமான காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, அவரின் பாதுகாப்பு வளையத்தை மீறி பைக்கில் வந்த இருவர் முதல்வரை நோக்கி வேகமாக வந்தனர். அவர்கள் சுமார் 100 கிமீ வேகத்தில் வந்தனர். இதனை பார்த்ததும் சுதாரித்துக்கொண்ட முதல்வர் சாலையில் இருந்து உடனடியாக நடைபாதைக்கு தாவிக் குதித்தார். முதல்வர் அப்படிச் செய்திராவிட்டால் இன்று மிகப்பெரிய விபத்து நிகழ்ந்திருக்கும்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, முதல்வரின் பாதுகாப்பு வீரர்கள் உடனடியாக பைக்கில் வந்த இருவரையும் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் இருவரும் சசிவாலய காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் அந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சிறப்புப் பாதுகாப்பு குழு (எஸ்எஸ்ஜி) கமாண்டண்ட் ஹரி மோகன் சுக்லாவும், சீனியர் சூப்பிரண்டண்ட் ஆஃப் போலீஸ் ராஜீவ் மிஸ்ரா ஆகியோர் உடனடியாக முதல்வர் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டனர்.

சம்பவம் நடந்த இடம் உயர் பாதுக்காப்பு உடைய பகுதியாகும். இந்தப்பகுதியில் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, லாலு பிரசாத் யாதவ் மற்றும் பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரது வீடுகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிஹார் முதல்வரின் பாதுகாப்பில் மீறல் நடப்பது இது முதல்முறை இல்லை. முன்னதாக, பக்தியார்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிதிஷ் குமார் கலந்து கொண்ட போது இளைஞர் ஒருவர் முதல்வரின் முதுகில் அடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முதல்வர் நிதிஷ் குமாருக்கு எஸ்எஸ்ஜி கமாண்டோவுடன் இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிஹார் மிலிட்டரி போலீஸ் தவிர (பிஎம்பி), பிஹார் மாநில போலீஸாரும் முதல்வரின் பாதுகாப்புக்கு பொறுப்பாவர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE