புதுடெல்லி: நாடு முழுவதிலும் பொருளாதார குற்றங்கள் மற்றும் அந்நியச் செலவாணி குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் 1956-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு மத்திய அமலாக்கத்துறை. மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறையின் கீழ் இது ஒரு தேசிய அமைப்பாக செயல்படத் தொடங்கியது.
டெல்லியில் அமைந்த அதன் அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் சட்டம் அறிந்த ஓர் அதிகாரியும் அவருக்கு உதவியாக ரிசர்வ் வங்கியில் இருந்து 2 அதிகாரிகள் அயல் பணியிலும் அமர்த்தப்பட்டனர். இத்துடன், சிறப்புக் காவல் பிரிவின் 3 ஆய்வாளர்களும் பணியில் இருந்தனர்.
ஒரு வருடத்தில் இந்த அமைப்பு, மத்திய அமலாக்கப் பிரிவு எனப் பெயர் மாற்றம் கண்டது. தொடர்ந்து, அதன் சட்டங்களில் பலவித திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. தற்போது இந்த பிரிவு, நிதி மற்றும் வருவாய் துறையின் கீழ் செயல்படுகிறது. சுமார் 40 ஆண்டுகள் வரை இருக்கும் இடம் தெரியாமல் அமலாக்கப் பிரிவு இருந்தது. அதன்பிறகு புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவுகளின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பிரபலமானது.
கடைசியாக 2018-ம் ஆண்டு சட்டத் திருத்தத்தின்படி 5 பணிகள் இதன் முக்கியப் பணிகளாக உள்ளன. சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டம் 2002 (பிஎம்எல்ஏ), அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (பெமா), தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் 2018 (எப்இஓஏ), அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை சட்டம் 1973 (பெரா), காபிபோசா சட்டம் 1974 ஆகியவற்றை அமல்படுத்துவது அதன் பணியாக உள்ளது.
» 6,500 கோடீஸ்வரர்களை இந்தியா இழக்கும் - ஹென்லி ஆய்வில் தகவல்
» இந்தியா–மியான்மர்–தாய்லாந்தை இணைக்கும் நெடுஞ்சாலை: 4 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும்
இதில், பிஎம்எல்ஏ சட்டமானது சர்வதேச அளவில் எடுத்த முடிவுகளால், இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் அமலாகி உள்ளது. இதில் முக்கியப் பிரிவுகள் சேர்க்கப்பட்ட பிறகுதான் அதன் பிடியில் அரசியல்வாதிகளும் சிக்கத் தொடங்கினர். இதனால் மத்தியில் ஒவ்வொரு ஆட்சியிலும் அதன் அரசியல் ஆயுதமாக மத்திய அமலாக்கப் பிரிவு பயன்படுத்தப்படுவதாகப் புகார் எழத் தொடங்கியது. தொடர்ந்து வலுப்பெறும் இப்புகாரானது, தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைதிற்கு பிறகு அதிகமாகி விட்டது. இதனால், உண்மையிலேயே அதன் அதிகாரம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா, இல்லையா எனும் கேள்வி பெரிதாக எழுந்து நிற்கிறது. ஏனெனில், அமலாக்கப் பிரிவின் நடவடிக்கைகள், அரசியல்வாதிகள் மீது பாயும்போது மட்டும் சர்ச்சைகள் எழுவது இதற்கு காரணமாகிறது.
எனினும், நடவடிக்கைக்கு ஆளாகும் இந்த அரசியல்வாதிகள் மீதான வழக்குகளில் உடனடியாக தீர்ப்பு வெளியாவது போல் தெரியவில்லை. பல வருடங்களாக நடைபெறும் இந்த வழக்குகளில் மிகச் சிலவற்றுக்கே தீர்ப்புகள் வெளியாகி உள்ளன. இதற்கு, பல வழக்குகளை விசாரிக்க அதன் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் மற்றும் இதர அலுவலர்கள் நியமிக்கப்படாததும் காரணமானது. இதை மறுக்கும் வகையில், அமலாக்கப் பிரிவு புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
இதன்படி, கடந்த ஜனவரி 31 வரை மொத்தம் 33,958 வழக்குகள் அமலாக்கப் பிரிவால் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இதில் 16,148 வழக்குகளில் விசாரணை முடிந்துள்ளது. 8,440 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 6,847 வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிஎம்எல்ஏ, பெமா, எப்இஓஏ ஆகிய மூன்று சட்டங்களின் கீழ் 5,906 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் எம்.பி., எம்எல்ஏ மற்றும் எம்எல்சி.க்கள் மீது 2.98 சதவீத வழக்குகள் (176) உள்ளன. இந்த 176-ல் 96 சதவீத வழக்குகளில் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளிடம் இருந்து ரூ.36.23 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தண்டனைகளுடன் ரூ.4.62 கோடிக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன.
பிஎம்எல்ஏ வழக்குகளில் ரூ.71,290 கோடி மதிப்புள்ள1,632 சொத்துகள் பறிமுதலாகி உள்ளன. மேலும் ரூ.40,904 கோடி மதிப்பிலான 260 சொத்துகளின் பறிமுதல் நீதிமன்ற ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த சுக்ராம், அமலாக்கப் பிரிவு வழக்கால் தண்டிக்கப்பட்ட முதல் அரசியல்வாதி ஆவார். அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சுக்ராமிற்கு 3 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2014-ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு பிறகு அமலாக்கப் பிரிவு வழக்குகளில் அரசியல்வாதிகள் அதிக எண்ணிக்கையில் கைதாகினர். இதற்கு பிஎம்எல்ஏ, பெமா, எப்இஓஏ ஆகிய மூன்று சட்டங்களின் வழக்குகளும் அமலாக்கப் பிரிவுடன் இணைந்தது காரணமானது. இந்த வழக்குகளில் பெரும்பாலும் எதிர்க்கட்சியினரே சிக்கி வருகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா என இந்தப் பட்டியல் நீள்கிறது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரின் பேரில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியும் கூட அமலாக்கப் பிரிவின் பிடியில் சிக்கினர். இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கும் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கை எனப் புகார் உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சியை அமலாக்கப் பிரிவின் அச்சுறுத்தல் மூலம் கவிழ்த்ததாக எதிர்க்கட்சிகள் புகார் கூறின.
இதற்கு, அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை முறைகள் காரணமாகின்றன. இத்தனைக்கும் அமலாக்கப் பிரிவின் விசாரணைகள், காவல் நிலையங்களில் போலீஸார் நடத்துவதை போல் கடுமையாக இருப்பதில்லை. விசாரணையின்போது மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றமும் பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதனால், குற்றவாளிகளைத் தொடாமலேயே பலவகை விசாரணை உத்திகளால் அவர்களிடம் உண்மையை வரவழைக்க முயற்சிக்கப்படுகிறது. இவற்றை வீடியோ பதிவுகளாக்கி தம் மீது குற்றச்சாட்டு இல்லாத வகையிலும் அமலாக்கப் பிரிவினர் தம்மை பாதுகாத்துக் கொள்வதுண்டு.
அதேசமயம், இவ்வகை விசாரணையில் குற்றம் சாட்டப்படும் அரசியல்வாதிகளின் மனத்தைரியம் குலைக்கப்படுகிறது. பணக்கார, முக்கிய அரசியல்வாதி ஒருவரை தரையில் அமரும்படி விசாரணையில் மிரட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. மேலும் சில குற்றவாளிகளை தூங்க விடாமல் பல மணிநேரம் விசாரித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் புகார்கள் உள்ளன. செந்தில் பாலாஜியும் இந்த வகையில், விசாரணைக்கு ஆளாகும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற புகார்கள் எழுவது இது முதன்முறையல்ல. இதற்குமுன் சிபிஐ போன்ற சில அமைப்புகள் மத்திய அரசின் அரசியல் ஆயுதமாக்கப்படுவதாகப் புகார் இருந்தது. இந்த வரிசையில் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு அமலாக்கப் பிரிவும் இணைந்துள்ளது. சமீப காலமாக சிபிஐ நடத்தும் விசாரணைகளில் அமலாக்கப் பிரிவும் இணைந்து விடுகிறது. இது, தம் நிர்வாகத்தின் கீழ் உள்ள பிரிவுகளிலும் வழக்குகள் தொடுத்து விசாரணை துவக்குவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலால், 2ஜி ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சிபிஐ நடத்திய விசாரணையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குகள் பதிவாகின. இவர்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். ஆனால் வழக்கின் தீர்ப்பில் அனைவரும் விடுதலை பெற்று விட்டனர். அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்குகளிலும் எவரும் தண்டிக்கப்படவில்லை.
அமலாக்கப் பிரிவு வழக்குகளை எதிர்கொண்டுள்ள தொழிலதிபர்களில் பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஆனால் முக்கிய பதவிகளில் இருப்பதால் ஓடிவிடக் கூடிய சூழல் அரசியல்வாதிகளுக்கு இல்லை. இதனால் முன்கூட்டியே செய்யப்படும் அவர்களது கைதுகள் தவிர்க்கப்படுவது நல்லது என்ற கருத்து பரவலாக உள்ளது. எனவே, அமலாக்கப் பிரிவின் நடவடிக்கையால் அரசின் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க வெளிப்படைத் தன்மையும், விரைவான விசாரணையும் அவசியமாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
37 mins ago
இந்தியா
20 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago