‘லவ் ஜிகாத்’தை கண்டித்து இந்து அமைப்புகள் கூட்டம் - உத்தராகண்ட் மாநிலத்தின் புரோலா நகரில் 144 தடை

By செய்திப்பிரிவு

உத்தர்காசி: உத்தராகண்ட் மாநிலத்தின் புரோலா நகரில் லவ் ஜிகாத்துக்கு எதிராக இந்து அமைப்புகள் இன்று மகா பஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அந்நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள புரோலா நகரில் கடந்த மே 26-ல் முஸ்லிம் இளைஞர் உள்ளிட்ட இருவரால் கடத்தப்பட்ட இந்து சிறுமி பின்னர் மீட்கப்பட்டார். அரகோட் பகுதியில் நேபாளி வம்சாவளியை சேர்ந்த 2 மைனர் சகோதரிகளை நவாப் என்ற இளைஞர் கடத்த முயன்றார். இச்சம்பவங்களால் புரோலா மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் பதற்றம் உருவாகியுள்ளது. புரோலா நகரில் கடத்தல் முயற்சிக்குப் பிறகு முஸ்லிம்களால் நடத்தப்படும் 40-க்கும் மேற்பட்ட கடைகள் 2 வாரங்களாக மூடப்பட்டுள்ளன. லவ் ஜிகாத்தில் ஈடுபட்டவர்கள் நகரை விட்டு வெளியேற வேண்டும் என முஸ்லிம்களின் கடைகளில் கடந்த வாரம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இரு சம்பவங்களிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், தேவபூமி ரக் ஷா அபியான் உள்ளிட்ட இந்து அமைப்புகளும் உள்ளூர் வர்த்தக அமைப்புகளும் லவ் ஜிகாத்துக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும் லவ் ஜிகாத்துக்கு எதிராக புரோலா நகரில் இந்து அமைப்புகள் இன்று (ஜூன் 15) மகா பஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்தன. இந்நிலையில் புரோலா நகரில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு ஜூன் 19-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் முஸ்லிம் உரிமைகளுக்காக போராடும் முஸ்லிம் சேவா சங்கதன் என்ற அமைப்பு டேராடூனில் வரும் 18-ம் தேதி மகா பஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
புரோலா நகரில் பல தலைமுறைகளாக வாழும் முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும், அங்கு அமைதியை சீர்குலைக்க விரும்பும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தராகண்ட் முதல்வருக்கு மாநில வக்பு வாரியம் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE