11 ஏக்கர் பரப்பளவில் ரூ. 1,800 கோடியில் லட்சுமி நரசிம்மர் கோயில்: தெலங்கானாவில் உருவாகுகிறது

By என்.மகேஷ் குமார்

தெலங்கானா மாநிலத்தில் புகழ்பெற்ற யாதாத்ரி குட்டா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற லட்சுமிநரசிம்மர் கோயில் ரூ. 1,800 கோடியில் புதுக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 14 ஏக்கர் பரப்பளவில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 14,000 ஏக்கர் சுற்றுப்புறத்தில் சுற்றுலா, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆன்மீக மையங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் போன்றவை கட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்த கோயில் தலம் யாதாத்ரி திருமலாவாக புது பொலிவுடன் உருவாகி வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் திருமலையில் குடிகொண்டு அருள் பாலித்து வருபவர் ஏழுமலையான். இதேபோன்று தெலங்கானா மாநிலம், யாதாத்ரி பகுதியில் யாதாத்ரி குட்டா எனும் இடத்தில் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. மலைமீது அமைந்துள்ள இக்கோயிலை திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்று புதுப்பிக்க வேண்டுமென தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் விரும்பினார். இதன் காரணமாக இக்கோயில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மூடப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. இக்கோயிலை சுற்றிலும் உள்ள 7 கிராமங்களை அரசு கையகப்படுத்தியது. மொத்தம் 14,000 ஏக்கரில் இங்கு சுற்றுலா மையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆன்மீக சொற்பொழிவு மையங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள், பஸ் நிலையம், அரங்குகள், உட்பட அனைத்து வசதிகளும் உருவாகி வருகிறது. கோயில் மட்டும் 11 ஏக்கரில் உருவாகி வருகிறது. இதில் முகப்பு ராஜ கோபுரம் மட்டும் 9 நிலைகளுடன் 100 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இக்கோயிலை சுற்றிலும் மொத்தம் 9 கோபுரங்களும் ஆகம விதிகளின்படி கட்டப்பட்டு வருகிறது. தற்போது இதன் 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. வரும் 2019ம் ஆண்டிற்குள் இக்கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் ஆண்டு வருமானம் தற்போது 2016-17ன் கணக்கின்படி ரூ. 2,678 கோடியாகும். யாதாத்ரி திருமலாவின் ஆண்டு வருமான தற்போது ரூ. 80 லிருந்து 100 கோடியாக உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் சராசரியாக 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால் யாதாத்ரி திருமலாவில் தற்போது தினமும் சராசரியாக 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசிப்பார்கள் என்றும், ஆண்டு வருமானம் ரூ. 200 கோடியை தாண்டும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இக்கோயிலில் 2.7 கி.மீ தொலைவிற்கு கிரிவலம் செல்ல வசதியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சாலையும் புதுப்பிக்கப்பட்டு, குடிநீர் குழாய்கள், கழிப்பறை வசதிகள், மின் வசதி போன்றவை செய்யப்பட்டு வருகிறது.

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ள தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், இக்கோயிலை மிகவும் பிரசித்தி பெற்ற, சுற்றுலா தலமாகவும் மாற்றி அமைக்க திட்டம் தீட்டி அதனை அமல் படுத்தி வருகிறார். ஆனால் இதனை எதிர்கட்சியினர் கடுமையாக சாடி வருகின்றனர். மக்கள் பணத்தை முதல்வர் வீணடிக்கிறார் என குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு பதிலாக விவசாய வளர்ச்சி, அணைக்கட்டும் பணிகள், நகர்புற வளர்ச்சி திட்டங்களுக்கு இந்த பணத்தை செலவழிக்கலாமென பிரச்சாரமும் நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்