பத்மநாபசுவாமி கோயிலில் இன்று நடைபெறும் ஆராட்டு விழாவுக்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் 5 மணி நேரம் மூடல்

By என்.சுவாமிநாதன்

சுற்றுலாத் துறையின் அசுர வளர்ச்சி, இயற்கை வளங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக கேரள மாநிலம் கடவுளின் தேசம் என அழைக்கப்படுகிறது. ஆனால் உலகிலேயே கோயில் திருவிழாவுக்காக, சர்வதேச விமான நிலையத்தையே மூடி ஆன்மிகத்திலும் கடவுளின் தேசம்தான் என பறைசாற்றி வருகிறது கேரளா.

கேரளாவின் தவிர்க்க முடியாத ஆன்மிக அடையாளங்களில் ஒன்று திருவனந்தபுரத்தில் உள்ள உள்ள பத்மநாப சுவாமி கோயில். இதன் பாதாள அறைகளில் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் மூலம் நாட்டின் பார்வையையே தன் பக்கம் திருப்பிய ஆலயமும் இதுதான்.

சேரமான் பெருமான் இக்கோயிலை முதன்முதலில் எழுப்பியதாக ஓலைச்சுவடிகள் கூறுகின்றன. 1686-ல் தீப்பிடித்த இந்தக் கோயில் அழிந்து விட்டது. பின்னர் திருவிதாங்கூர் மன்னரான மார்த்தாண்ட வர்மாவின் முயற்சியால் 1729-ல் இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டது. அப்போது மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 12,000 சாளக்கிராமத்தினாலும் ‘கடுசர்க்கரா’ என்ற அஷ்டபந்தன கலவையாலும் நிறுவப்பட்ட புது ‘அனந்தசயன மூர்த்தி’ பிரதிஷ்டை செய்யப்பட்டது.

1750-ம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா தனது அரசை, இக்கோயிலின் இறைவனான பத்மநாபசுவாமிக்கு பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து பரிபூரண சரணாகதி அடைந்தார். இதனால் பத்மநாபசுவாமியே திருவிதாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது. அன்று முதல் இன்று வரை கேரளாவின் அனைத்து விஷயங்களிலும் பத்மநாப சுவாமிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மன்னராட்சி முறை ஒழிப்புக்கு பின்னர், மக்களாட்சி முறை மலர்ந்தும் கேரள மக்களின் மனதில் இறைவனாக மட்டுமின்றி நிர்வாகப் பிரதிநிதியாகவும் வியாபித்துள்ளார் பத்மநாப சுவாமி.

உச்சபட்ச மரியாதை

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவனந்தபுரம் பத்ம நாப சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி, பங்குனி மாதங்களில் பத்து நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதன்படி ஐப்பசி திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக சுந்தரவிலாசம் அரண்மனை பகுதியில் நேற்று பரிவேட்டை நிகழ்வு நடந்தது. திருவிழாவின் இறுதி நாளான இன்று ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்காக கிழக்கே கோட்டை யில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனம், யானைகள் அணிவகுப்பு, காவலர்களின் பேண்ட் வாத்தியம் முழங்க ஆராட்டு ஊர்வலம் புறப்படும். இதில் திருவிதாங்கூர் அரச பரம்பரை குடும்பத்தினர் மற்றும் பல்லாயிரக்கணக்காண பக்தர்களும் பங்கேற்பர். இந்த ஊர்வலமானது சங்குமுகம் கடற்கரையில் சுவாமி விக்கிரகங்களை நீராட்டி மீண்டும் பத்மநாபசுவாமி கோவிலை வந்தடையும்.

விமான சேவையில் மாற்றம்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் உள் பகுதிகள், பல்வேறு வெளிநாடுகளுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு சுற்றுலா வருபவர்கள், திருவனந்தபுரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள், பக்கத்தில் உள்ள தமிழகத்தின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தோர் என ஆயிரக்கணக்காணோர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமான நிலையம், ஆராட்டு ஊர்வலத்தை முன்னிட்டு இன்று 5 மணி நேரம் மூடப்படும்.

இதுகுறித்து திருவனந்தபுரம் விமான நிலைய இயக்குநர் ஜார்ஜ் தாரகன் கூறும்போது, “சர்வதேச அளவில் ஒரு கோயில் திருவிழாவுக்காக விமான ஓடுதளம் மூடப்படுவது இங்குதான் என நினைக்கிறேன். பத்மநாப சுவாமி கோயில் ஆராட்டு விழா நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த விமான நிலையம் 1932-ல் அந்த ஊர்வலப் பாதையின் குறுக்கே அமைந்தது. அப்போது முதலே ஊர்வல நேரத்தில் விமான ஓடு தளத்தை மூடி வருகிறோம். அதிலும் ஊர்வலம் எங்களது ஓடுதளம் வழியாக வரும்போது இரு புறமும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் நின்று பாதுகாப்பு தருவார்கள். இதேபோல் ஏராளமான கேரள போலீஸார் உடன் வருவார்கள். தீவெட்டி ஊர்வலமும் நடக்கும்.

ஆராட்டு ஊர்வலத்தில் திருவிதாங்கூர் ராஜவம்சத்தின் தற்போதைய தலைவர் மூலம் திருநாள் ராமவர்மா தலைமை வகித்து, வாளுடன் செல்வார். இது தொன்றுதொட்டு நடந்து வரும் சடங்கு. இதற்கு மரியாதை செய்யும் வகையில் இன்று 4 மணி முதல் இரவு 9 மணி வரை ரன்வே மூடப்படும். அதேபோல உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவனந்தபுரம் வரும் விமானங்களுக்கும் இதுகுறித்து ஒரு வாரத்துக்கு முன்பே தகவல் கொடுத்துள்ளோம். ஆராட்டு முடிந்து சாமி ஊர்வலம் மீண்டும் இதே வழியாகத் தான் செல்லும். ஓடுதளம் வழியாக செல்வதால் பாதுகாப்பு கருதி பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து சிறப்பு அடையாள அட்டை கொடுத்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.

விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சிக்கு இடையிலும், கலாச்சாரம், தொன்மை, பாரம்பரியத்துக்கு கேரளா கொடுக்கும் முக்கியத்துவம் பாராட்டுக்குரியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்