பிஹாரில் நிதிஷ் அரசின் கூட்டணி அமைச்சர் திடீர் ராஜினாமா - பின்னணி என்ன?

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த சந்தோஷ் குமார் சுமன் இன்று (ஜூன் 13) தனது பதவியை ராஜினாமா செய்தார். தன்னுடைய ஹிந்துஸ்தானி அவம் மோர்ச்சா கட்சியை ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைக்க வற்புறுத்தியதால், கட்சியை காப்பாற்ற இவ்வாறு செய்யதாக சந்தோஷ் குமார் தெரிவித்தார்.

பிஹார் முன்னாள் முதல்வரான ஜிதன் ராம் மாஞ்சியின் மகனான சந்தோஷ் குமார் சுமன், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மகாபந்தன் கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். சுமன் பிஹாரின் பட்டியல் இனம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அவர் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தோஷ் குமார், "காட்டில் பல்வேறு மிருகங்கள் வாழ்கின்றன. அங்கு சிங்கங்களும் வேட்டையாடப்படுகின்ற மிருகங்களும் இருக்கின்றன. அவை அனைத்தும் தப்பிப் பிழைக்கின்றன. நாங்களும் இதுவரை தப்பிப் பிழைத்தோம். இப்போது பாதுகாப்பாக இல்லை என்று உணர்ந்ததால் விலகி வந்திருக்கிறோம்.

மகாபந்தன் கூட்டணியில் நாங்கள் அனைவரும் நிதிஷ் குமாரை எங்கள் தலைவராகவே கருதினோம். இப்போதும் அவரை அப்படியே கருதுகிறோம். ஆனால், கடந்த சில நாட்களாக என்னுடைய கட்சியை அவர்களுடன் இணைத்துவிடும்படியான யோசனை முன்வைக்கப்பட்டது. ராஜினாமா என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு இல்லை. இது கட்சியில் இருக்கும் அனைவரையும் சந்தித்து பேசி எடுக்கப்பட்ட முடிவு.

நாங்கள் ஒரு சுதந்திரமான கட்சி. இப்போது நாங்கள் எங்களுடைய இருப்பைப் பற்றி மட்டுமே தீவிரமாக சிந்திக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது பற்றி முடிவு எதுவும் செய்யவில்லை. நாங்கள் இன்னும் மகாபந்தன் கூட்டணியில் தொடரவே விரும்புகிறோம்.

பாஜக ஏன் எங்களுக்கு அழுத்தம் தரவேண்டும். நான் அழுத்தத்துக்குள்ளே வேலை செய்வில்லை. நான் கட்சிக்காக வேலை செய்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு எங்கள் கட்சிக்கு அழைப்பு வந்தால் நாங்கள் கட்டாயம் கூட்டத்தில் கலந்து கொள்வோம்" என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE