2020 - 21 டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது ட்விட்டருக்கு இந்திய அரசு அழுத்தம் தந்தது: முன்னாள் சிஇஓ பரபரப்பு குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோரின் ட்விட்டர் கணக்குகள் குறித்த தகவல்களைப் பகிருமாறு மத்திய அரசு தங்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக ட்விட்டர் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்ஸி பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதேபோல் மத்திய அரசைக் கடுமையாக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் கணக்குகள் தொடர்பாகவும் நிறைய கோரிக்கைகளை இந்திய அரசு வைத்ததாக அவர் கூறியுள்ளார். அவ்வாறு பகிராவிட்டாலோ இல்லை அவர்கள் கூறிய கணக்குகளை முடக்காவிட்டாலோ ட்விட்டர் ஊழியர்கள் மீது சோதனைகள் நடத்தப்படும் என்று எச்சரித்ததாகவும் டார்ஸி கூறியுள்ளார்.

நேற்று (ஜூன் 12) 'பிரேக்கிங் பாயின்ட்ஸ்' என்ற யூடியூப் நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் ஜேக் டார்ஸி இதனைத் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தபோது எந்தெந்த வெளிநாடுகளில் இருந்து என்ன மாதிரியான அழுத்தங்களை அவர் சந்திக்க நேர்ந்தது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு டார்ஸி இந்தப் பதிலைக் கூறியுள்ளார்.

அந்தக் கேள்விக்கு அவர் அளித்தப் பதிலில், "டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும், தங்கள் அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் தொடர்பாகவும் நிறைய முறை இந்தியா கோரிக்கைகள் விடுத்தது. அதற்கு நாங்கள் ஒத்துழைக்காவிட்டால் இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தைத் தடை செய்வோம் என்றும் மிரட்டியிருக்கிறது. ட்விட்டருக்கு இந்தியா மிகப் பெரிய சந்தை என்ற நிலையில் அந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. அதையும் தாண்டி இந்தியாவில் உள்ள ட்விட்டர் ஊழியர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் என்று எச்சரித்தது. அதை அவர்கள் செயல்படுத்தவும் செய்தனர். இதுதான் இந்தியா என்ற ஜனநாயக தேசம். துருக்கியும் இந்தியாவைப் போலத்தான் நடந்து கொண்டது" என்றார். ஜேக் டார்ஸியின் இந்தக் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மவுனம் காக்கும் மத்திய அரசு: ட்விட்டர் முன்னாள் சிஇஓ கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில் மத்திய அரசு இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் எதிர்க்கட்சியினர் ஜேக் டார்ஸியின் பேட்டி அடங்கிய வீடியோ கிளிப்பைப் பகிர்ந்து மோடி அரசு இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டும் என்று விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ராஜ்தீப் சர்தேசாய் தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடி அரசு ட்விட்டர் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. விவசாயிகள், விவசாய இயக்கங்களின் கணக்குகளை முடக்கச் சொல்லியுள்ளது. மத்திய அரசை விமர்சித்த பத்திரிகையாளர்களின் கணக்கை முடக்கச் சொல்லியுள்ளது அல்லது ட்விட்டர் ஊழியர்கள் ரெய்டுக்கு ஆளாவார்கள் என்று சொல்லியுள்ளது. இதை ட்விட்டரின் முன்னாள் சிஇஓ ஜேக் டார்ஸி கூறியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

1,200 கணக்குகள்.. கடந்த 2021 பிப்ரவரியில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தபோது மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திடம் 1,200 கணக்குகளை முடக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக 'தி இந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அந்தக் கணக்குள் போராட்டக்காரர்களுடன் தொடர்புடையது. ஆனால் அரசு அவை காலிஸ்தான் ஆதரவாளர்களுடையது என்று சந்தேகிப்பதாகக் கூறி முடக்கக் கூறியிருந்தது என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் செய்தியின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் அப்போது மத்திய அரசை விமர்சனங்களுக்கு உள்ளாக்கியது.

மேலும், இந்தக் கணக்கு முடக்கம் தொடர்பான ஆர்டிஐ கேள்விக்கு மத்திய அரசு தேசப் பாதுகாப்புக் காரணங்களுக்காக பதிலளிக்க முடியாது என்று கூறியதும் நினைவுகூரத்தக்கது. அதுமட்டுமல்லாமல், அப்போதைய ட்விட்டர் சிஇஓ ஜேக் டார்ஸி விவசாயப் போராட்டங்கள் தொடர்பான சில ட்வீட்களுக்கு லைக் இட்டதை விமர்சித்தது. ட்விட்டர் நிறுவனத்தின் நடுநிலைமையை மத்திய அரசு கேள்விக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் தான் ஜேக் டார்ஸி இந்திய அரசின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE